பெண் பணியாளர்களின் எண்ணிக்கை 37 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்
மத்திய அரசின் துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளின் துறைகளில் பணி நியமனங்கள் மேற்கொள்ளும் பொருட்டு, நாடு முழுவதும் RozgarMela எனும் வேலைவாய்ப்பு மேளாவை மத்திய அரசு நடத்தி வருகிறது.
அந்த வகையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு மேளாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 2022-23 நிதியாண்டில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கை 37 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். இந்த எண்ணிக்கை 2017-18ஆம் நிதியாண்டில் 23 சதவீதமாக இருந்தது என்றும் அவர் கூறினார்.
“தொழிலாளர்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளதால், சமூகத்தில் சீரான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆண்களை விட பெண்கள் கடினமாக உழைக்கிறார்கள்.” என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் பெண்களை மையமாகக் கொண்ட திட்டங்கள் தொழிலாளர்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க உதவியுள்ளன. கொள்கை உருவாக்கம் மற்றும் தலைமைப் பொறுப்புகளில் பெண்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு பணிபுரியும் பெண்கள் தங்களது திறன்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் அப்போது சுட்டிக்காட்டினார். 2017-18இல் 6 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் 2022-23இல் 3.7 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், வெவ்வேறு துறைகளில் 172 பேருக்கு பணி நியமன ஆணைகளை தர்மேந்திர பிரதான் வழங்கினார்.