
பெண்களுக்கான சானடரி நாப்கின்களுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்தற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வரியை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும் கர்நாடக மாநிலத்தில் மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள அகில பாரதிய ஜனவாடி மகிளா சங்காதனே, பிரஜனா கன்னு சலாகா சமிதி ஆகிய மகளிர் அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமான உறுப்பினர்கள் நேற்று பெங்களூருவில் உள்ள சட்டப்பேரவை முன் போராட்டம் நடத்தினர்.
அப்போது, பெண்கள் பயன்படுத்தும் சானட்டரி நாப்கின்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 12 சதவீதஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெற வேண்டும் என்று முழுக்கமிட்டனர்.
இது குறித்து அகிலபாரதிய ஜனவாடி மகிளா சங்காதனே அமைப்பின் துணைத் தலைவர் கே நீலா கூறுகையில், “ நாட்டில் உள்ள பெண்களுக்கு தரமான நாப்கின்களை இலவசமாக வழங்குமாறு நாங்கள் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துவருகிறோம். ஆனால், மத்திய அரசோ நாப்கின்களுக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி.வரி விதித்துள்ளது.
பெண்கள் தங்களின் மாதவிலக்கு காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்களுக்கு 12 சதவீத வரியை மோடி அரசு விதித்தது மனிதநேயமில்லாதது. இது பெண்களின் முன்னேற்றத்துக்கு எதிரானது. மத்திய அரசைப் பொருத்தவரை,பெண்களின் நலனிலும், தேவையிலும் அக்கறையின்றி இருக்கிறது, அறிவார்ந்த சிந்தனை இல்லாமல் நடந்து கொள்கிறது.
இப்போது விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியால் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், வயது வந்த சிறுமிகள் நாப்கின்களை வாங்க இயலாது. இப்போதுள்ள கார்ப்பரேட் உலகத்தில் நாப்கின்களை இலவசமாக பெண்களுக்கு அரசு வழங்க வேண்டும். பா.ஜனதாவில் உள்ள பெண் தலைவர்களே இது குறித்து மவுனம் காப்பது கண்டனத்துக்குரியது.
கர்நாடக அரசு பள்ளிகளில் இலவசமாக நாப்கின்களை சிறுமிகளுக்கு வழங்கி வருகிறது. இதை அனைத்து மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும்.
பெட்ரோல், ரியல் எஸ்டேட், மது ஆகியவை ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள், உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது வெட்கக்கேடு” என்று தெரிவித்தார்.