
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அரசு முறை பயணமாக தலிபான் வெளியுறவு அமைச்சர் ஆமிர் கான் முத்தாகி இந்தியாவுக்கு வருகை தந்தார். அவருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அப்போது காபூலில் விரைவில் இந்திய தூதரகம் திறக்கப்படும் என அமைச்சர் ஜெயசங்கர் உறுதி அளித்தார்.
ஆப்கான் வெளியுறவு அமைச்சர் ஆமிர் கான் முத்தாகி
இதனையடுத்து ஆப்கான் வெளியுறவு அமைச்சர் ஆமிர் கான் முத்தாகி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இது எனது முதல் இந்தியப் பயணம். ஆப்கானிஸ்தானில் இந்தியா தனது தூதரகத்தை மீண்டும் திறக்கவிருக்கிறது. நாங்களும் இந்தியாவில் தூதரகத்தை விரைவில் திறப்போம். இந்தியா - ஆப்கன் உறவுகள் வரலாற்று சிறப்பானது. ஆப்கானிஸ்தானில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர். அனைவரது உரிமையும் பாதுகாப்பாக இருக்கிறது. பெண்கள் உரிமை பிரசாரம் செய்பவர்கள் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். ஒவ்வொரு நாட்டிற்கும், அதன் சொந்த பாரம்பரியங்களும், கொள்கைகளும் உள்ளன. அதன்படிதான் அந்த நாடு செயல்படும். அதற்காக, நாங்கள் உரிமைகளை நிராகரிக்கிறோம் என்று ஆகிவிடாது.
பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவித்து வரும் பாகிஸ்தானை தாக்கும் வகையில் மற்ற நாடுகளுக்காக ஒருபோதும் ஆப்கான் மண்ணை விட்டுக்கொடுக்க மாட்டோம். ஆப்கானியர்களின் தைரியத்தை சோதித்து பார்க்கக் வேண்டாம். யாராவது இதைச் செய்ய விரும்பினால், சோவியத் யூனியன், அமெரிக்கா மற்றும் நேட்டோவிடம் கேட்க வேண்டும். ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவது நல்லதல்ல என்பதை அவர்களால் சொல்ல முடியும் என்று இந்தியாவில் இருந்து பாகிஸ்தானை எச்சரித்தார்.
பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுப்பு
இதனிடையே பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நம் நாட்டில் விதிமுறைகளை வகுக்க பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை திணிக்க தாலிபானுக்கு அதிகாரம் கொடுத்தது யார் என பெண்ணியவாதிகள் மற்றும் சமூக செயற்பாட்டார்கள் காட்டமான கேள்வியை எழுப்பியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு கட்டுப்பாடுகள்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். அதாவது பெண்கள் ஜிம் செல்லக்கூடாது, பூங்கா செல்லக்கூடாது, உயர்கல்வி பயில கூடாது, வாகனங்கள் ஓட்டக்கூடாது, பொது இடங்களில் கணவனுடன் சேர்ந்து பெண்கள் செல்லக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.