
கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மாதந்தோறும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அளிக்கும் புதிய கொள்கைக்கு (Menstrual Leave Policy 2025) கர்நாடக அமைச்சரவை நேற்று (வியாழக்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், அனைத்துத் துறைகளிலும் பணிபுரியும் பெண்களுக்காக இத்தகைய விரிவான கொள்கையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக கர்நாடகா உருவெடுத்துள்ளது.
ஆடை உற்பத்தி நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள் உட்பட அரசு மற்றும் தனியார் துறைகள் அனைத்திலும் பணிபுரியும் பெண்கள் இனி மாதத்திற்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்.
இந்தப் புதிய கொள்கையை, பணியிடத்தில் பெண்களின் உரிமைகள் மற்றும் நலன் சார்ந்த விஷயமாக மாநில அரசு அங்கீகரித்துள்ளது. இதனால், பெண் ஊழியர்கள் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் இந்த விடுப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
முதலமைச்சர் சித்தராமையா இது குறித்து சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், "எங்கள் அரசாங்கம் பணியிடத்தில் கண்ணியம் மற்றும் நல்வாழ்வுக்காக உறுதியாக நிற்கிறது. 'மாதவிடாய் விடுப்புக் கொள்கை 2025' மூலம், கர்நாடகா முழுவதும் உள்ள பெண் ஊழியர்கள் இனி மாதந்தோறும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பைப் பெறுவார்கள். இது மனிதநேயம், புரிதல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பணியிடத்தை நோக்கிய ஒரு நடவடிக்கையாகும்," என்று தெரிவித்துள்ளார்.
ஒடிசா அரசு கடந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியது.
பீகார் மாநிலம் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இந்த விடுப்பினை வழங்கி வருகிறது.
கேரளாவில் உள்ள அரசுப் பல்கலைக்கழக மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு காரணமாக வருகைப்பதிவில் 2% விலக்கு அளிக்கப்படுகிறது.
அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகர் இட்டாநகரில் உள்ள பெண் காவலர்களுக்கு மாதவிடாயின் போது சிறப்பு விடுப்பு வழங்கப்படுகிறது.
'ஸொமேட்டோ' (Zomato) உணவு டெலிவரி நிறுவனம், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த விடுப்புக் கொள்கையை அறிமுகப்படுத்திய முதல் தனியார் நிறுவனம் என்ற பெருமையைப் பெற்றது. அதைத் தொடர்ந்து பைஜூஸ், ஸ்விகி, மற்றும் எல் & டி போன்ற நிறுவனங்களும் இதே கொள்கையை நடைமுறைப்படுத்தின.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டே இந்தக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது என்று, இது குறித்து ஆய்வு செய்த நிபுணர் குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மக்களவை உறுப்பினர் ஹிபி ஈடன் (Hibi Eden) பெண்களுக்கான மாதவிடாய் விடுப்பு உரிமை மற்றும் மாதவிடாய் சுகாதாரப் பொருட்கள் இலவச அணுகலுக்கான தனியார் சட்ட மசோதாவை (Private Member Bill) நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.