
ஒரு வருட கால திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவர மனைவி ரூ.5 கோடி ஜீவனாம்சம் கேட்டதால், உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தை மீண்டும் உச்ச நீதிமன்ற மத்தியஸ்த மையத்திற்கு (Mediation Centre) அனுப்பி, சுமூகத் தீர்வு காணுமாறு இரு தரப்பினருக்கும் உத்தரவிட்டனர்.
நீதிபதிகள், “இதே நிலை தொடர்ந்தால், நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பிக்கும்” என எச்சரித்தனர். இந்த திருமணம் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே நீடித்ததை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதிகப்படியான பணத்தைக் கேட்பது குறித்து கவலை தெரிவித்தனர்.
கணவரின் வழக்கறிஞரிடம் பேசிய நீதிபதி பர்திவாலா, “அவரை மீண்டும் அழைத்து வருவது நீங்கள் செய்யும் ஒரு தவறு. அவரது கனவுகள் மிகவும் பெரியவை” என்று கூறினார்.
ரூ.5 கோடி கோரிக்கை நியாயமற்றது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், இத்தகைய நிலைப்பாடு எதிர்மறை உத்தரவுகளை கொண்டுவரலாம் என்றும் தெரிவித்தது.
“திருமணத்தை முறித்துக்கொள்ளும் நோக்கத்திற்காக மனைவி ரூ.5 கோடி கோரியதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே திருமண வாழ்க்கை ஒரு வருடம் மட்டுமே நீடித்தது. மனைவியின் நிலைப்பாடு இதுவாக இருந்தால், அவருக்கு பிடிக்காத சில உத்தரவுகளை நாங்கள் பிறப்பிக்க வேண்டியிருக்கும், இல்லையா? மனைவி நியாயமான கோரிக்கையை முன்வைத்து, இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று நீதிபதி பர்திவாலா கூறினார்.
அமேசான் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரியும் கணவர், இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர ரூ.35 முதல் 40 லட்சம் வரை வழங்குவதாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். ஆனால், மனைவி அந்த தொகையை நிராகரித்துள்ளார்.
முந்தைய மத்தியஸ்த முயற்சிகள் தோல்வியடைந்ததாக மனைவியின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். சமரச முயற்சிகள் தோல்விக அடையக் காரணம் என்ன எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், ஒரு தீர்வை எட்டுவதற்கு நியாயமான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இந்த வழக்கை தீர்க்க இரு தரப்பினரும் அக்டோபர் 5 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு உச்ச நீதிமன்ற மத்தியஸ்த மையத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்தியஸ்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு இந்த வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும்.