
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மத்திய சிறையில் இருந்து 27 அடி உயர சுவரில் ஏறி, உயரழுத்த மின்சார வேலியைத் தாண்டி இரண்டு கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர் மத்திய சிறைச்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை கண்காணிக்க 18 சிறைக் காவலர்கள் பணியில் உள்ளனர். சிறையைச் சுற்றி 27 அடி உயர சுவர் மற்றும் அதன் மேல் மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த நேவல் கிஷோர் மஹவார் மற்றும் அனாஸ் குமார் ஆகிய இருவரும் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு இந்த சிறையில் அடைக்கப்பட்டனர். நண்பர்களான இவர்கள் இருவரும் கூட்டாகச் சேர்ந்து திருடிவிட்டு தப்பிச் செல்லும் பழக்கம் கொண்டவர்கள்.
சம்பவத்தன்று இரவு, சிறை அதிகாரிகள் சற்றுக் கவனக்குறைவாக இருந்தபோது, இருவரும் தப்பிக்கத் திட்டமிட்டனர். 18 அடி உயர ரப்பர் குழாயைப் பயன்படுத்தி 27 அடி சுவரில் ஏறிய அவர்கள், அதன் மேல் இருந்த மின்சார வேலியைத் தாண்டி குதித்து தப்பிச் சென்றனர். சிறைக்குள் ஒன்றரை மணிநேரம் சுற்றித் திரிந்த பின்னரே அவர்கள் வெளியேறும் வழியைக் கண்டறிந்துள்ளனர்.
கைதிகள் தப்பிச் சென்றதை அறிந்த போலீசார் அவர்களைத் தேடி வந்தனர். நேற்று மாலை அனாஸ் குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மற்றொருவரான நேவல் கிஷோர் மஹவாரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இரண்டு பெண் அதிகாரிகள் உள்பட ஏழு சிறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதே சிறையில், இதற்கு முன்பு அருகே இருந்த பெண்கள் சிறையின் சுவரைப் பயன்படுத்தி தப்பிக்க முயன்றனர். முதல் முயற்சியில் அவர்களது போர்வை சேதமடைந்ததால் தோல்வியுற்றனர். ஆனால், இரண்டாவது முறையாக முயற்சி செய்து அவர்கள் வெற்றிகரமாக சிறையில் இருந்து தப்பிச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்கள் ஜெய்ப்பூர் சிறையின் பாதுகாப்பு குறைபாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.