சிறுத்தையுடன் சண்டைபோட்ட வீரத்தாய்… குழந்தையை மீட்க துணிகர சம்பவம்!!

By Narendran SFirst Published Dec 1, 2021, 10:09 PM IST
Highlights

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினப் பெண் ஒருவர், தனது குழந்தையை கவ்விச் சென்ற சிறுத்தையுடன் சண்டை போட்டு தனது குழந்தையை மீட்டுள்ளார். 

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினப் பெண் ஒருவர், தனது குழந்தையை கவ்விச் சென்ற சிறுத்தையுடன் சண்டை போட்டு தனது குழந்தையை மீட்டுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டம், சஞ்சய் காந்தி தேசியப் பூங்காவின் அருகே உள்ளது. இந்த சித்தி பகுதியில் பாய்கா பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில் பூங்காவின் சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் பாடி ஜிரியா கிராமத்தில் வசித்து வருபவர் கிரண் பாய்கா. அவர் பாய்கா பழங்குடியினத்தை சார்ந்தவர். கடந்த நவம்பர் 30 ஆம் தேதி மாலை 7 மணியளவில் தன் கணவரின் வருகைக்காக வீட்டின் வெளியே  தன் 4 குழந்தைகளுடன் அவர் காத்திருந்துள்ளார். அப்போது சிறுத்தை ஒன்று அங்கு நுழைந்துள்ளது. அதன் நடமாட்டத்தை அவர் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவருடைய கைக்குழந்தையை தன் மடியில் வைத்துக்கொண்டும், அவருடைய ஆறு வயது மகன் ராகுல் மற்றும் இரு குழந்தைகளும் அவர் அருகே அமர்ந்திருந்தனர். தூரத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை ராகுல் மீது பாய்ந்து அவனை பற்றிக்கொண்டு ஓடியது. இதை சற்றும் எதிர்பார்க்காத கிரண் சுதாரித்துக் கொண்டு தன் மடியில் இருந்த  கைக்குழந்தையை மற்றொரு குழந்தையிடம் கொடுத்துவிட்டு அவர்கள் அனைவரையும் வீட்டினுள் அனுப்பிவிட்டு சிறுத்தையை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றுள்ளார்.  

இருள் சூழத்தொடங்கிய போதிலும், புதருக்குள் மறைந்திருந்த சிறுத்தையை அவர் அடையாளம் கண்டுகொண்டார். அதன் கால்கள் ராகுல் மீது இருந்துள்ளன. இந்த காட்சியை கண்ட கிரண், சற்றும் அஞ்சாமல் வெறுங்கைகளுடன் சிறுத்தையுடன் போராடினார். அப்போது அந்தப் பெண்ணுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. கடும் போராட்டத்திற்கு பிறகு சிறுத்தையின் பிடியில் இருந்த குழந்தையை மீட்டார். அந்த குழந்தையின் உடலில் நகக் கீறல்களும், பல்லால் ஏற்பட்ட காயங்களும் ஏற்பட்டன. சிறுத்தையுடனான போராட்டத்தில் வெற்றி பெற்ற கிரண், மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளதை கண்ட கிராம மக்கள் கிரணையும் குழந்தையையும் அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்கள் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுத்தையுடன் போராடி குழந்தையை மீட்ட அந்த பெண்ணுக்கு அந்த கிராம மக்கள் பாரட்டுகளை தெரிவித்தனர்.

மேலும் அவருக்கு பலரது பாராட்டுகளும் குவிந்து வருகிறது. சமீபத்தில் இதே போன்ற சம்பவம், சஞ்சய் புலிகள் பாதுகாப்பு சரணாலயம் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து வருவதால் அப்பகுதியை சுற்றி வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் இதை அடுத்து அந்த சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது ஒரு புறம் இருக்க பாதி ஜிரியா கிராமத்தில் இருந்து மிக மிக அருகில் தான் சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா உள்ளது. இங்கு, சிறுத்தை, காட்டுப்பூனை, கீரி, நாற்கொம்புமான், சாம்பர், எலிமான், வராகம், ல்ங்கூர், குரங்கு, மகரம், முதலை முதலியன இருக்கும் நிலையில் அடிக்கடி அப்பகுதியில் இருந்து விலங்குகள் இரைக்காகவும் தண்ணீருக்காகவும் ஊருக்குள் வருவது வழக்கமாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிகின்றனர். 

click me!