Congress: ஐக்கிய முற்போக்கு கூட்டணின்னு ஒண்ணு இருக்கா..? காங்கிரஸ் கூட்டணியை சரிச்சுவிட்ட மம்தா பானர்ஜி.!

By Asianet TamilFirst Published Dec 1, 2021, 9:30 PM IST
Highlights

ஒத்த எண்ணங்களை கொண்ட கட்சிகள் ஒன்று சேர வேண்டும். பிறகு ஆக்கப்பூர்வமான தலைமையை ஏற்படுத்துவதே மம்தாவின் நோக்கம். நாட்டில் வலிமையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி என ஒன்று இல்லை என மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

2024-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எப்படியும் வீழ்த்த வேண்டும் என்று மம்தா பானர்ஜி திட்டமிட்டு வருகிறார். எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியிலும் மம்தா ஈடுபட்டார். இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்தும் பேசினார். ஆனால், இந்த விசயத்தில் காங்கிரஸ் கட்சி தேவையில்லாமல் தாமதப்படுத்துவதாக கூறி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, காங்கிரஸிடமிருந்து ஒதுங்க தொடங்கியுள்ளது.

மேலும் பல மா நிலங்களில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியிலும் மம்தா பானர்ஜி இறங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் மம்தா பானர்ஜி கட்சியில் சேர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், மும்பைக்கு வந்துள்ள மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தற்போது நடக்கும் சர்வாதிகார ஆட்சியை எதிர்க்க ஒருவரும் இல்லை. இதனால், மாற்று அணி உருவாக்கப்பட வேண்டும்.

நாட்டில் சரத்பவார் ஒரு மூத்த தலைவர். எனவே அவரைச் சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்தேன். காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் அணி சேர வேண்டும் என்று சரத்பவார் கூறியதை நான் ஏற்று கொள்கிறேன். ஆனால், தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி என ஒன்று இல்லை. அது வரலாற்றில்தான் உள்ளது.” என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

முன்னதாக சரத்பவார் கூறுகையில், காங்கிரசாக இருந்தாலும், வேறு கட்சியாக இருந்தாலும் பாஜகவை எதிர்ப்பதில் ஒன்று சேர்ந்தால், அதை நாங்கள் வரவேற்போம். ஒத்த எண்ணங்களை கொண்ட கட்சிகள் ஒன்று சேர வேண்டும். பிறகு ஆக்கப்பூர்வமான தலைமையை ஏற்படுத்துவதே மம்தாவின் நோக்கம். நாட்டில் வலிமையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தற்போதைய சூழல் குறித்து மட்டும் நாங்கள் ஆலோசிக்கவில்லை. தேர்தல் குறித்தும் பேசினோம்.” என்று சரத்பவார் தெரிவித்தார்.

click me!