
மற்ற ஆன்மிகவாதிகள் போலில்லை சத்குரு ஜக்கிவாசுதேவ்! சர்ச்சையில் சிக்கிக் கொள்ளாமல் வார்த்தைகளை விடவேண்டும் என்பதில் ரொம்ப தெளிவாக இருப்பார். ஆனால் அவரை சர்ச்சை குளத்தில் இழுத்துவிட துடிப்பது மீடியாக்களின் இயல்பு.
நேற்று கோயமுத்தூர் வெள்ளியங்கிரியிலுள்ள ஈஷா யோக மையத்தில் தமிழகத்தில் உள்ள பல விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார் ஜக்கிவாசுதேவ். இந்த தேசத்திலுள்ள விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தவரை அப்படியே நைஸாக ஆன்மிக அரசியல், காவிரி நீர் விவகாரம், ரஜினி-கமல் அரசியல் பிரவேசம்...என்று சென்சேஷனல் விஷயத்துக்குள் இழுக்கும் கேள்விகள் வந்து விழுந்துள்ளன.
அப்போது ‘கர்நாடக முதல்வரிடம் பேசி தமிழகத்திற்கு தரவேண்டிய நியாயமான தண்ணீரை வாங்கித்தர நீங்கள் முயற்சிக்கலாமே! அடிப்படையில் நீங்களும் கர்நாடக நபர்தானே!’ என்று ஒரு கேள்வி வந்து விழுந்துள்ளது.
அதற்கு “அங்கே தேர்தல் வரும் நேரமிது. தமிழகத்துக்கு தண்ணீர் கொடுத்தால் மக்கள் கோபப்படுவார்கள்! ஆட்சி விழுந்துவிடும் என்கிற பயம் அங்கே ஆள்பவர்களுக்கு இருக்கலாம். நான் அரசியல்வாதிகளிடமும், ஆட்சியாளர்களிடமும் பேசுவேன் தான். ஆனால் அரசியல் பேசமாட்டேன்.
நான் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டால் மட்டும் கொடுத்துவிடுவார்களா என்ன? பிரச்னைகள் இல்லாமல் இல்லை. எல்லா இடங்களிலும் பிரச்னைகள் இருக்கிறது.” என்று எஸ்கேப் ஆனவரிடம் ரஜினியின் ஆன்மிக அரசியல் பற்றி கேட்டதற்கு ‘அது அவருடைய விருப்பம், இதில் நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது?’ என்று நழுவிவிட்டாராம்.