ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன
மக்களவை, மாநில சட்டப்பேரவை, நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து, விரைவில் பரிந்துரைகளை வழங்க எட்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி ஆராயும் குழு உடனடியாக செயல்படத் தொடங்கும் என்றும், விரைவில் தனது பரிந்துரைகளை வழங்கும் எனவும் மத்திய அரசு தனது அறிவிப்பில் கூறியுள்ளது.
இந்தக் குழு அரசியலமைப்புச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நோக்கத்திற்காக திருத்தங்கள் தேவைப்படும் பிற சட்டங்கள் மற்றும் விதிகளில் செய்யப்பட வேண்டிய திருத்தங்களை ஆய்வு செய்து பரிந்துரைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொங்கு சட்டமன்றம், நம்பிக்கையில்லாத் தீர்மானம், கட்சித் தாவல் அல்லது வேறு ஏதேனும் நிகழ்வுகள் நடந்தால், அந்த சூழ்நிலைகளுக்கு சாத்தியமான தீர்வுகள் என்ன என்பது தொடர்பாகவும் ஆராய்ந்து இந்தக் குழு பரிந்துரைக்கும்.
மேலும், அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களுக்கு மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டுமா என்பதையும் ஆய்வு செய்து இக்குழு பரிந்துரைக்கவுள்ளது. அரசியலமைப்பின் சில திருத்தங்களுக்கு குறைந்தபட்சம் 50 சதவீத மாநில சட்டசபைகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை உருவாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு 50 சதவீதத்திற்கும் அதிகமான மாநிலங்களால் அங்கீகரிக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் என்ன? சாதக, பாதகங்கள் என்ன?
கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச் சாவடி மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் தேவைப்படுவதால் அதுகுறித்தும் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஆய்வு செய்து பரிந்துரைக்கவுள்ளது. மக்களவை, மாநில சட்டப் பேரவைகள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கான தேர்தல்களில் வாக்காளர்களை அடையாளம் காண ஒரே வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளையும் இக்குழுவினர் ஆய்வு செய்து பரிந்துரைக்கவுள்ளனர். பொது வாக்காளர் பட்டியல் செலவுகளைக் குறைக்க உதவும் என்றும், அந்த பணிக்காக ஈடுபடுத்தப்படும் மனிதவளத்தை குறைக்கும் எனவும் நாடாளுமன்ற குழு சமீபத்தில் தெரிவித்திருந்தது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடத்தினாலும், உள்ளாட்சி தேர்தல்களை மாநில தேர்தல் ஆணையம் நடத்துகிறது. அரசியலமைப்பின் கீழ் இந்த இரண்டு ஆணையங்களும் தனித்தனி அமைப்புகளாகும்.
மக்களவை (543 எம்.பி.க்கள்), மாநில சட்டமன்றங்கள் (4120 எம்.எல்.ஏ.க்கள்) மற்றும் பஞ்சாயத்துகள்/முனிசிபாலிட்டிகள் (30 லட்சம் உறுப்பினர்கள்) ஆகிய மூன்று அடுக்கு ஜனநாயகத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அசல் முன்மொழிவு eன முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்ஒய் குரேஷி சுட்டிக்காட்டியுள்ளார்.
1951-52 முதல் 1967 வரை மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்கள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. அதன் பிறகு இந்த சுழற்சி உடைந்து, இப்போது, ஒவ்வொரு ஆண்டும் அல்லது ஒராண்டில் வெவ்வேறு காலங்களில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இதனால், செலவுகள் அதிகமாகின்றன என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவதால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படைகள் மற்றும் பிற தேர்தல் அதிகாரிகள் அவர்களின் முதன்மை கடமைகளில் இருந்து நீண்டகாலம் வேறு ஒரு பணியை செய்வதாகவும், அடிக்கடி கருத்துக் கணிப்புகள் நடத்தப்படுவதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படுவதால் வளர்ச்சிப் பணிகளை அவை சீர்குலைப்பதாகவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.