
உத்தரப் பிரதேச மாநிலம் தன்ஸ்ரீ கிராமத்தைச் சேர்ந்த நபரும் அவரது மனைவியும் அவர்களது 3 வயது குழந்தையை அழைத்துகொண்டு முசாபர்நகரின் போபா பகுதியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.
குழந்தைக்கு மருத்துவரிடம் சிகிச்சை அளித்துவிட்டு மூவரும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். அப்போது அவர்களை காரில் வந்த நான்கு பேர் வழிமறித்து நிறுத்தியுள்ளனர்.
அவர்களை அருகில் இருந்த கரும்பு தோட்டத்துக்குள் அழைத்து சென்று கணவரை கட்டிப்போட்டு குழந்தையை கத்திமுனையில் வைத்து மிரட்டி, அந்த பெண்ணை 4 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 4 பேரும் மாறி மாறி அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
கரும்பு தோட்டத்தில் இவர்களைக் கண்ட விவசாயிகள், போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து அந்த 4 பேரையும் தேடிவருகின்றனர்.
இதேபோல், கடந்த ஆகஸ்ட் மாதம் முசாபர் நகர் மண்டி பகுதியில் பதினொன்றாம் வகுப்பு மாணவி ஒருவரை, கரும்பு தோட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே மாதிரி மற்றொரு பெண், கணவர் கண்முன் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.