
செல்போன் எண்ணுடன், ஆதார் எண்ணை எளிதாக இணைக்கும் வகையில் புதிய செயலி(ஆப்ஸ்) ஒன்றை வௌியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணியில் மத்திய தொலைத் தொடர்பு துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தொலைத்தொடர்பு துறையும், தொலைத் தொடர்பு நிறுவனங்களும் எஸ்.எம்.எஸ். மற்றும் ஐ.பி.ஆர்.எஸ். அடிப்படையிலான செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதன் மூலம் ஒரு முறை பயன்படுத்தும் சந்கேத வார்த்தை(ஓ.டி.பி.) மூலம் செல்போன் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க முடியும்.
தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் ஓ.டி.பி. அடிப்படையில், எம்.எம்.எஸ். மூலம் உறுதி செய்து ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளும். தொலைத்தொடர்பு சேவை வழங்குவோர், ஓ.டி.பி. வேண்டுகோளை, ஆதார் வழங்கும் அமைப்புக்கு அனுப்புவார்கள். அந்த ஓ.டி.பி.எண்ணை அந்த மொபைல் எண்ணுக்கு அனுப்பிவைப்பார்கள். அந்த ஓ.டி.பி. எண்ணை உறுதி செய்தபின், ஆதார் உறுதி செய்யப்படும்.
இந்த முறை மிகவும் பாதுகாப்பான முறையாகும். இதன் மூலம் தனிநபர் ஒருவரின் அந்தரங்க விவரங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும். செல்போன் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பதற்காக தொலைபேசி நிலையம்வரை அலையத் தேவையில்லை.