மஹாபாரதத்தில் பாண்டவர்கள் தப்பிய ‘அரக்கு மாளிகை’ இடத்தில் அகழாய்வு... தொல்லியல் துறை அனுமதி!

First Published Nov 3, 2017, 12:01 PM IST
Highlights
The Archeological Survey of the Araku House that the Pandavas escaped in the Mahabharata


மஹாபாரதத்தில் கவுரவர்களிடம் இருந்து பஞ்சபாண்டவர்கள் தப்பிய அரக்கு மாளிகை இடம், குகை ஆகியவற்றை அகழாய்வு செய்ய இந்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம், பாகபத் மாவட்டத்தில், பர்னாவா பகுதியில் இருக்கும் இடத்தில், மஹாபாரதத்தில் பாண்டவர்கள் வாழ்ந்ததாக அங்குள்ள மக்கள் இன்னும் நம்புகின்றனர்.

தப்பிய குகை

இது குறித்து ஓய்வு பெற்ற ஆகழாய்வு துறை கண்காணிப்பாளர் கே.கே. சர்மா கூறுகையில், “ மஹாபாரதத்தில் அரக்கு மாளிகை என்பது முக்கியமானதாகும். கவுரவர்கள் கட்டிய இந்த மாளிகையில், பாண்டவர்களை குடியமர்த்தி உயிருடன் தீ வைத்து கொளுத்த திட்டமிட்டனர். ஆனால், இந்த மாளிகை அருகே குகை அமைத்து, பாண்டவர்கள் தப்பினார்கள். 



இந்த இடம், பாகபத் மாவட்டத்தில் உள்ள பர்னாவா பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடத்துக்கு வர்னாவரத் என்றும் அழைக்கப்படும். கவுரவர்களிடம் 5 கிராமங்களை பாண்டவர்கள் கேட்டனர், அதில் இந்த கிராமமும் ஒன்றாகும்’’ என்றார்.

அனுமதி
அகழாய்வு துறையின் இயக்குநர் ஜிதேந்திர் நாத் கூறுகையில், “ திட்டங்களை தீவிரமாக பரிசீலித்தபின், 2 அகழாய்வு அதிகாரிகளுக்கும், தொல்லியல் துறைக்கும் அனுமதியளித்துள்ளோம். எங்களுடைய அகழாய்வு கிளையும் உடன் ஆய்வில் ஈடுபடும்’’ என்றார். 

இந்த அகழாய்வு டிசம்பர் மாதத்தில் முதல் வாரத்தில் தொடங்கி, 3 மாதங்கள் வரை நடக்கும் என்றும், தொல்லியல்துறையின் மாணவர்கள் இதில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன முக்கியத்துவம்

இந்த இடத்தின் முக்கியத்துவம் குறித்து தொல்லியல்துறையின் இயக்குநர் மன்ஜுலிடம் கேட்டபோது, “ மதரீதியில் இப்போது இந்த இடம் குறித்து எந்த கருத்தும் கூறமுடியாது. சந்தயன், சினவுலி ஆகிய இடங்களுக்கு அருகே இருப்பதால், இந்த இடத்தை நாங்கள் தேர்வு செய்தோம். சினவுலி இடத்தில் ஹரப்பா நாகரீக தொடர்பான ஆய்வு கள் நடந்து வருகின்றன. அங்கு மனித எலும்புகளும், பானைகளும் அதிக அளவில் கடந்த 2005ம் ஆண்டு எடுக்கப்பட்டன. சந்தயான் கிராமத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெண்கல மணிமகுடம் கண்டுபிடிக்கப்பட்டது’’ என்றார். 

click me!