
சஞ்சய் லீலா பன்சாலியின் 'பத்மாவதி' படத்தை தடை செய்ய வேண்டும் என மகாராஷ்டிர சுற்றுலாத் துறை அமைச்சர்ஜெய்குமார் ராவல் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். இது தொடர்பாக தணிக்கைத் துறைக்கு மாநில அரசு சார்பில் கடிதம் எழுதப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்களுக்கு அமைச்சர் ஜெய்குமார் ராவல் மும்பையில் நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது-
வரலாறு திரிப்பு
வரலாறும், வரலாற்று குறிப்புகளும் இந்தப் படத்தில் திரித்து கூறப்பட்டுள்ளது. படத்தில் உண்மை எப்படி திரிக்கப்பட்டுள்ளது என்றும், சரியான வரலாறு போன்று திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது போன்று கூறப்பட்டுள்ளதைப் பற்றியும் முதல்வர்தேவேந்திர பட்நாவிசிடம் தெரிவித்துள்ளேன்.
வரலாறு குறித்து எழுதும்போது நமது கற்பனைக்கு சுதந்திரம் அளிக்க முடியாது. படம் கண்டிப்பாக தடை செய்யப்படவேண்டும். ராஜ்புத் இனத்தவர்களும் தடை கோரியுள்ளனர். அதை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல யோசித்துள்ளோம்.
தீக்குளிப்பு
ராணி பத்மாவதி மற்றும் 16 ஆயிரம் அரச குல பெண்களும், அலாவுதின் கில்ஜியின் கைகளில் சிக்காமல் இருக்க தீக்குளித்தார்கள். இது நமக்கு மிகப் பெரிய பெருமை. இன்றுவரை ராணி பத்மாவதியின் துணிவைப் பற்றி எங்கள் பெண்களுக்கு சொல்லித் தருகிறோம். ராணி பத்மாவதியின் கணவர் ராவல் ரத்தன் சிங் மற்றும் பப்பா ராவல் ஆகியோரின் நேரடி சந்ததி நாங்கள் .
எப்படி நடனமாடியிருப்பார்?
மகாராஷ்டிரத்தில் ராஜ்புத் வம்சத்தை சேர்ந்த பலர் வாழ்ந்து வருகின்றனர். சஞ்சய் லீலா பன்சாலி படம் எடுக்க பல கதைகள் உள்ளன. ரன்வீர் சிங் போன்ற ஒரு நடிகர், எப்படி அலாவுதின் கில்ஜி வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்பது அதிசயமாக இருக்கிறது. படத்தில் காட்டுவது போல் ராணி பத்மாவதி நடனமே ஆடியதில்லை. அப்பறம் எப்படி பொதுவில் ஆடியிருப்பார்?.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டிசம்.1 வெளியீடு?
ராஜ்புத் இனத்தவர்களின் கோரிக்கையை முதல்வருக்கு எடுத்துச் சென்றுள்ள ராவல், படத்தை தடை செய்யக் கோரி, தணிக்கைத் துறைக்கு மாநில அரசு எழுதும் என்றும் தெரிவித்துள்ளார்.
தீபிகா படுகோன், ஷாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடித்துள்ள 'பத்மாவதி', டிசம்பர் 1-ம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.