
மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்களின், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் ஆண்டு கல்வி உதவித்தொகை ரூ. 30 ஆயிரத்தில் இருந்து ரூ.54 ஆயிரமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
7-வது ஊதியக்குழுவில் அளிக்கப்பட்ட பரிந்துரையின்படி, மத்திய அரசு ஊழியர்களின் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வி உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.2,250யை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது-
மத்திய அரசின் பணிபுரியும் ஊழியர்களின் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் ஆண்டு கல்வி உதவித்தொகை 7-வது ஊதியக் குழுவின் அடிப்படையில் ரூ.54 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தில் தாய், தந்தை இருவரும் மத்திய அரசு ஊழியராக இருந்தால், அதில் ஒருவர் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மேலும், இதர படிகள் 25 சதவீதம் ஆண்டுதோறும் தானாக உயர்த்தப்படும், அதேசமயம், அகவிலைப்படி திருத்தப்பட்டதன் அடிப்படையில் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகள் விடுதியில் தங்கிபடித்தால், விடுதி கட்டணத்தில் மாதத்துக்கு ரூ.6,250 மானியமாகத் தரப்படும். இந்த சலுகைகளைப் பெற குழந்தைகள் படிக்கும் கல்வி நிலையத்தில் இருந்து ஒரு சான்றிதழைப் பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் அளித்தல் போதுமானது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6-வது ஊதியக்குழுவில் குழந்தைகளின் கல்வி உதவித்தொகை மாதத்துக்கு ரூ.1500 ஆகவும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ. ஆயிரமாகவும், விடுதி மானியம் ரூ. 4,500 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.