எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி, பாஜக முன்னிலை பெற்றிருப்பதற்கான சில காரணங்களை இங்கு பார்க்கலாம்
எதிர்வரவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இக்கூட்டணியில் மொத்தம் 28 கட்சிகள் உள்ளன. இரண்டு முறை ஆட்சியில் இருந்ததால் பொதுவாகவே பொதுமக்களிடம் ஏற்படும் ஆட்சிக்கு எதிரான மனநிலை, எதிர்க்கட்சிகளின் கூட்டணி உள்ளிட்டவைகள் பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும், எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி, பாஜக கை ஓங்கியிருப்பதாகவே கூறப்படுகிறது. நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளும் அதனை எதிரொலித்துள்ளன.
இந்த நிலையில், 2024 தேர்தலுக்கு முன்னதாக, இந்தியாவின் மிகவும் பிரபலமான தலைவர், வலுவான அரசியல் அமைப்பு மற்றும் மேம்பட்ட சந்தைப்படுத்தல் உத்தி ஆகியவற்றால் பாஜக குறிப்பிடத்தக்க நன்மையைப் பெற்றுள்ளது என சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட் அமைப்பின் தெற்காசிய நிகழ்ச்சியின் மூத்த உறுப்பினரும் இயக்குநருமான மிலன் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மாநிலத் தேர்தல் முடிவுகள் தந்த ஏமாற்றத்தால் எதிர்க்கட்சிகள் தத்தளித்து வருவதாகவும், அதனை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், வாரிசு அரசியலுக்காக விமர்சிக்கப்படும் காங்கிரஸ் கட்சியும் கூட காந்தியின் குடும்பப்பெயர் இல்லாத ஒரு தலைவரை (மல்லிகார்ஜுன கார்கே) அறிமுகப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
பலதரப்பட்ட எதிர்க்கட்சிகளிடையே நெகிழ்வான அரசியலை உருவாக்க முடியுமா என்பதுதான் முக்கியமான கேள்வி என்று கூறியபோது, காலம் ஒரு அழுத்தமான காரணி என்றும் மிலன் வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார். வலிமைமிக்க பாஜகவை முறியடிப்பதில் எதிர்க்கட்சி ஒரு சவாலான பணியை எதிர்கொள்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வரவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஒரு வலுவான நிலையைத் தக்க வைத்துக் கொண்டதாக மிலன் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். முதன்மையாக பிரதமர் மோடியின் பிரபலம்தான் அதற்கு காரணம் என்பது பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
உலகளாவிய தலைவர் ஒப்புதல் கண்காணிப்பு தளமான மார்னிங் கன்சல்ட், நவம்பர் பிற்பகுதியில் எடுத்த கணக்கெடுப்பின்படி, 79 சதவீத இந்தியர்கள், மோடியின் பணி செயல் திறனுக்கு 60க்கும் அதிகமான மதிப்பெண் கொடுத்து அங்கீகரித்துள்ளனர். 2019 ஆம் ஆண்டு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் ஓரளவு குறைந்தாலும் கூட, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்களவையில் பெரும்பான்மையான இடங்களைப் பெற வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
வாராக்கடன்: வரும் ஆனா வராது - நிதியமைச்சரை விளாசிய சு.வெங்கடேசன் எம்.பி.!
எதிர்க்கட்சி முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் உள்ள சிக்கல்கள், பிற்படுத்தப்பட்ட சாதியினரிடையே ஆதரவைப் பெறுவதற்கான போட்டி, நலன்புரி முயற்சிகளில் அதிகரித்து வரும் போட்டி, வெகுஜன அக்கறையாக மாறிப்போயுள்ள வெளியுறவுக் கொள்கையின் முக்கியத்துவம் என எதிர்வரவுள்ள மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி, பாஜக முன்னிலை பெற்றிருப்பதற்கான ஐந்து விஷயங்களை மிலன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாநில மற்றும் தேசிய தேர்தல்
சமீபத்தில் நடந்த மாநில சட்டசபை தேர்தல், பாஜகவின் கொண்டாட்டத்திற்கு காரணமாக இருந்தாலும் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என மிலன் எச்சரித்துள்ளார். மாநில மற்றும் தேசிய தேர்தல்களுக்கு இடையே வரலாற்று ரீதியாக தொடர்பிருந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் அது பலவீனமடைந்துள்ளது. உதாரணமாக, 2018ஆம் ஆண்டு சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அடுத்தடுத்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சி வெற்றி பெறவில்லை. இருப்பினும், பிரதமர் மோடியின் பிரபலத்துடன், இந்த தொடர்பு 2024 இல் வலுப்பெறும் என்ற ஊகங்கள் உள்ளன.
எதிர்க்கட்சிகளின் பிளவு
2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் எதிர்க்கட்சிகளின் பிளவுபட்ட எதிர்ப்பால் பாஜக பலனடைந்தது. தற்போதும், எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு சவால் மிக்கதாக இருப்பதாகவே மிலன் கருத்து தெரிவிக்கிறார். இதை எதிர்கொள்ள, இருபதுக்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணியை (இந்தியா) உருவாக்கின. பாஜகவுக்கு எதிராக ஒன்றுபடுவதை இக்கூட்டணி நோக்கமாகக் கொண்டாலும், தெளிவான தலைவர் இல்லாதது, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை உள்ளிட்டவைகளில் சிக்கல் நிலவுகிறது. இது பாஜகவுக்கு பலம்.
ஓபிசி விசுவாசம்
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் விசுவாசத்தை காட்ட முயற்சிப்பது மற்றொரு முக்கியமான காரணியாகும் என்று மிலன் வைஷ்ணவ் கூறுகிறார். ஓபிசி வாக்காளர்களை ஈர்ப்பதில் பாஜகவின் வெற்றி அதன் தேர்தல் வெற்றிகளில் ஒன்று. இருப்பினும், எதிர்க்கட்சிகள் ஓபிசி ஆதரவை மீட்டெடுக்க முயல்கின்றன. விரிவான சாதிவாரிக் கணக்கெடுப்பு மற்றும் அரசு வேலைகளில் விகிதாச்சார இடஒதுக்கீடு போன்ற பிரச்சினைகள் மேம்படுத்தப்படுவதாக கூறுகின்றன.
நலன்புரி விஷயங்களில் போட்டி
பாஜகவின் புதிய நலத்திட்டங்கள் வாக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் நான்காவது காரணியாக நலன்புரி விஷயங்களை மிலன் வைஷ்ணவ் சுட்டிக்காட்டுகிறார். பொது விநியோக பொருட்களில் முதலீடுகள் மற்றும் நேரடி பணப் பரிமாற்றங்கள் வாக்காளர்களை பாதித்தது 2019 தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய மாநிலத் தேர்தல்களில், நிதிப் பரிமாற்ற வாக்குறுதிகள் முக்கியமாக இடம்பெற்றன. நலத்திட்ட வாக்குறிதிகளில் கட்சிகள் ஒருவரையொருவர் விஞ்சும் அளவுக்கு போட்டியிடுகின்றன.
வெகுஜன பிரச்சினையாக வெளியுறவுக் கொள்கை
மிலனின் கூற்றுப்படி, இறுதிக் காரணியாக ஒரு வெகுஜனப் பிரச்சினையாக வெளியுறவுக் கொள்கை நிலவுகிறது. இப்பிரச்சினைகள் உயரடுக்கின் கவலையாகக் கருதப்பட்ட நிலையில், அதனை பிரதமர் மோடி மாற்றியுள்ளார். குறிப்பாக 2019 புல்வாமா தாக்குதல் மற்றும் பாகிஸ்தானில் அடுத்தடுத்து நடந்த வான்வழித் தாக்குதல்கள் போன்ற நிகழ்வுகள். இந்தியாவின் உலகளாவிய நிலையை மோடி உயர்த்தியதாக ஒரு கருத்து உள்ளது. உலகளாவிய அரங்கில் G20 தலைவர் பதவி போன்றவை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இறுதியாக, 2024 மக்களவை தேர்தல் பாஜகவுக்கு சாதகமாக இருப்பதாகவும், நன்மையளிக்கும் வகையில் இருப்பதாகவும் மிலன் வைஷ்ணவ் கூறுகிறார். மாநிலத் தேர்தல்களில் ஏமாற்றமளிக்கும் முடிவுகள், எதிர்க்கட்சிகள் மீண்டும் தங்களை ஒருங்கிணைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார். எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பில் இருக்கும் சவால் பாஜகவுக்கு பலம் எனவும் அவர் கூறியுள்ளார்.