வாராக்கடன்: வரும் ஆனா வராது - நிதியமைச்சரை விளாசிய சு.வெங்கடேசன் எம்.பி.!

By Manikanda Prabu  |  First Published Dec 12, 2023, 12:41 PM IST

வாராக்கடன் விவகாரத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சு.வெங்கடேசன் எம்.பி. கடுமையாக விமர்சித்துள்ளார்


நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில், “2014 - 15 இல் இருந்து 2022 - 23 வரை வராக் கடன் என அறிவிக்கப்பட்ட தொகை எவ்வளவு? இதே காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட வராக்கடன் எவ்வளவு?” என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ல ஒன்றிய நிதி இணையமைச்சர் பகவத் காரத், வராக் கடன் என அறிவிக்கப்பட்ட தொகை ரூ 10.42 லட்சம் கோடி எனவும், வசூலிக்கப்பட்ட வராக்கடன் ரூ 1.61 லட்சம் கோடி எனவும் பதிலளித்துள்ளார்.

Latest Videos

undefined

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. கூறுகையில், “நாடாளுமன்றத்தில் வங்கிக் கடன்கள் பற்றி நான் எழுப்பி இருந்த கேள்விக்கு ஒன்றிய நிதி இணையமைச்சர் பகவத் காரத் பதில் அளித்துள்ளார். 2014 - 15 இல் இருந்து 2022 - 23 வரை வராக் கடன் என அறிவிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்ற கேள்விக்கு ரூ 10.42 லட்சம் கோடி என்று பதில் அளித்துள்ள அமைச்சர் இதே காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட வராக்கடன் எவ்வளவு என்ற கேள்விக்கு ரூ 1.61 லட்சம் கோடி மட்டுமே என்று பதில் தந்துள்ளார்.

கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை!

எப்போது வராக்கடன் பற்றி பேசினாலும் வராக்கடன் (Written off) என்றால் வராமலே போகிற கடன் (Waive off) அல்ல, அதற்கு பின்னரும் வசூலிக்கப்படும் என்று நீண்ட விளக்கத்தை நிதியமைச்சர் தருவார். எல்லோருக்கும் ஏதோ இந்த வராக் கடன் ரூ 10.42 லட்சம் கோடியையும் விரட்டி விரட்டி ஒன்றிய அரசும், வங்கிகளும் வசூலித்து விடும் என்று எண்ணத்தை நிதியமைச்சர் உருவாக்குவார். இதைப் பற்றி பேசுபவர்களுக்கு ஏதோ பொருளாதாரமே தெரியாது என்ற எள்ளல் நடையிலும் பேசுவார். ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் வராக்கடன் 10.42 லட்சம் கோடி. ஆனால் இதே காலத்தில் வசூலான வராக்கடன் 1.61 லட்சம் கோடி என அமைச்சர் பதில் அளித்துள்ளார் என்றால் நமக்கு எழும் கேள்வி இதுதான்.

நிதியமைச்சரே வசூலுக்கும் வராக்கடனுக்கும் இடையே இவ்வளவு வித்தியாசம் உள்ளதே. இதற்கு பெயர் என்ன? வரும் ஆனா வராது என்றால் அதற்கு பெயர் என்ன?” என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

click me!