மத்தியப்பிரதேச முதல்வராக மோகன் யாதவ் நாளை பதவியேற்க உள்ளார்.
மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 163 இடங்களிலும், காங்கிரஸ் 66 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன் மூலம், தனிப் பெரும்பான்மை கட்சியாக பாஜக உருவெடுத்தாலும், அம்மாநில முதல்வரை அறிவிப்பதில் தாமதம் நிலவி வந்தது.
அதன் தொடர்ச்சியாக, மத்தியப்பிரதேச மாநில தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் போபாலில் நேற்று நடைபெற்றது. அதில், சட்டமன்றக் கட்சி தலைவராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, அம்மாநில ஆளுநரிடம் ஆட்சியமைக்க அவர் உரிமை கோரினார்.
undefined
இந்த நிலையில், மத்தியப்பிரதேச முதல்வராக மோகன் யாதவ் டிசம்பர் 13ஆம் தேதி (நாளை) பதவியேற்க உள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளார். மத்தியப்பிரதேச மாநில முதல்வராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, ஜக்தீஸ் தேவுடா, ராஜேந்திர சுக்லா ஆகிய இரண்டு பேர் துணை முதல்வர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அம்மாநில சபாநாயகராக முன்னாள் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரை நியமிக்கவும் பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது.
ராஜஸ்தான் முதல்வர் யார்? சவுகானை போல் வசுந்தரா ஒதுக்கப்படுவாரா? இன்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!
உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள உஜ்ஜைன் தக்ஷின் தொகுதியில் இருந்து மத்தியப் பிரதேச சட்டப் பேரவைக்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் மோகன் யாதவ். 2013ஆம் ஆண்டு இதே தொகுதியில் முதன்முதலாக எம்எல்ஏவாக வெற்றி பெற்ற அவர், 2018 மற்றும் 2023ஆம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலிலும் இதே தொகுதியில் வெற்றி பெற்றார்.
1965ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி உஜ்ஜையினியில் பிறந்த மோகன் யாதவ், சீமா யாதவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். BSC, LLB, MA, MBA மற்றும் PhD உள்ளிட்ட பட்டங்களை பெற்றுள்ள மோகன் யாதவ், முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பணியாற்றியுள்ளார். மாநில மல்யுத்த சங்கங்களிலும் தீவிரமாக செயல்பட்டு வருபவர்.
மத்தியப்பிரதேச மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களான, ஓபிசி சமூகத்தை சேர்ந்தவர் மோகன் யாதவ். ஆர்.எஸ்.எஸ். ஆதரவை பெற்ற அவர் மீது இதுவரை எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லை.