கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடக ஆளுநர் மாளிகைக்கு நேற்றிரவு 11.30 மணியளவில் திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விரைந்ததால் பதற்றம் ஏற்பட்டது. அடையாளம் தெரியாத நபர் விடுத்த மிரட்டலையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் அங்கு தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மத்தியப்பிரதேச முதல்வராக நாளை பதவியேற்பு: யார் இந்த மோகன் யாதவ்?
ஆனால், சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை. முன்னதாக, ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக மர்மநபர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள், மாநில போலீசாருக்கு தகவல் தெரிவித்து அவர்களை உஷார் படுத்தியுள்ளனர்.
அத்துடன், சம்பவ இடத்துக்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் நேரடியாக வந்தும் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து, மத்தியப் பிரிவு போலீஸார் விதான சவுதா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
முன்னதாக, கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள 15 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் கடந்த 1ஆம் தேதி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்பு, கடந்த ஆண்டில் 30 பள்ளிகளுக்கு தினமும் இதே போன்ற மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.