
மத்தியப்பிரதேசம் மாநிலம், மாண்டசோர், நீமச் ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கும், அங்கு நடந்த வன்முறை, போலீஸ் துப்பாக்கிச் சூட்டுக்கும் காரணம் மோடியின் டிஜிட்டல் திட்டம், மாநிலத்தில் ஆளும் பா.ஜனதா அரசின் ஊழல் தான் என்றால் நம்ப முடிகிறதா…
மத்திய பிரதேசத்தின் மேற்கு பிராந்தியத்தில் விவசாயிகள் கடந்த 1-ந்தேதியில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விளை பொருட்களுக்கு சரியான கொள்முதல் விலையை வழங்க வேண்டும் என்பது அவர்களது முக்கிய கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு மண்டசோர் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது, வன்முறை ஏற்பட்டு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 விவாசயிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, ஊரடங்கு உத்தரவு, பிறப்பிக்கப்பட்டு போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.
இந்த போராட்டம், கலவரத்துக்கு முக்கியக் காரணங்களில் பிரதானமானது, விவசாயிகள் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக டிஜிட்டல் பரமாற்றத்துக்கு மாறச்செய்தது, மின்வெட்டு, பாப்பி எனப்படும் போதைபொருள் விற்பனை ஒழுங்குபடுத்தியதுதான் கலவரத்தை தூண்டியுள்ளது.
இது குறித்து மாண்டசோர் மாவட்டத்தின் மூத்த உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ பாப்பி எனப்படும் ஓப்பியம் போதைப்பொருள் உருவாக்கப் பயன்படும் செடியை பயிர்செய்யவும், விற்பனை செய்யவும் மத்திய, மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகள் விதித்துவிட்டன. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக மண்டசோர், நீமச் மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், குறிப்பாக படேல் இனத்தவர்கள் வேலையின்றி தவித்தனர்.
தொடக்கத்தில் பாப்பி செடிகளை மருத்துவப் பயன்பாடுகளுக்கு மட்டும் விளைவித்துக்கொள்ள அனுமதித்தது. ஆனால், சிலர் அதை கள்ளச்சந்தையில் போதைப்பொருட்களுக்கு விற்பனை செய்யத் தொடங்கினர். இதனால், அரசு பாப்பி விவசாயத்தையும், விற்பனையையும் முறைப்படுத்திவிட்டது.
அதுமட்டுமல்லாமல், விவசாயிகளை கட்டாயமாக டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாறச்சொல்லி அரசு கட்டாயப்படுத்தியது. இதனால், பொருட்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்துவிட்டு, பணம் தராமல் டிஜிட்டல் பேமெண்டில் தருவேன் என்று கூறியது. ஏற்கனவே வறுமையில்வாடும் விவசாயிகள் டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாறமுடியாமல் பெரிதும் சிரமப்பட்டனர். கல்வியறிவு போதுமானதாக இல்லாததால், அதிகாரிகள் அவர்களை எளிதாக ஏமாற்றினர்.
3-வதாக, விவசாயிகள் விவசாயம் செய்ய போதுமான அளவு மின்சாரத்தை அரசு அளிப்பதில்லை. நாள் ஒன்றுக்கு 3 முதல் 4 மணிநேரமே மின்சாரம் கிடைத்ததால், விவசாயிகள் டீசலில் நீர் இறைக்க பயன்படும் மோட்டார்களை வாங்கிப் பொருத்தி நீர்பாய்ச்ச பயன்படுத்தினர்.இதனால், டீசலுக்காக கணிசமாக செலவு செய்ய அதற்காக கடன் வாங்கினர். மேலும், மின்கட்டணத்தை முறையான தேதிக்குள் செலுத்தாவிட்டால், மின்இணைப்பு துண்டிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் இருந்துமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல்வர் சிவராஜ் சவுகான் ஆட்சியில் நிலவும் மோசமான ஊழல்காரணமாக, விவசாயிகளுக்கு முழுமையான மானியத்தில், உரங்கள் போய் சேர்வதில்லை. இதனால், அரசு அளிக்கும் மானிய உரங்களை பெறமுடியாமல், அதிகவிலை கொடுத்துசந்தையில் விவசாயிகள் உரம் வாங்கினர். இது, விவசாயத்தின் உற்பத்தி செலவை அதிகரித்தது. ஆனால், சந்தைக்கு விளைபொருட்களை கொண்டு சென்றால் குறைந்தபட்ச விலையைக் காட்டிலும் அரசு அதிகாரிகளே விலை கேட்கும் போது விவசாயிகள் ஆத்திரமும், கோபமும்அடைந்து,போராட்டத்தில் இறங்கினர்” எனத் தெரிவித்தார்.
ராஷ்ட்ரிய கிஷான் மஸ்தூர் சங்கத்தின் தேசியத் தலைவர் சிவகுமார் சர்மா கூறுகையில், “முதல்வர் சிவராஜ் சவுகான் ஆட்சியில் மாநிலத்தில் விவசாயத்துறையில் மிகமோசமாக ஊழல் பரவிவிட்டது. கிராமங்களில் மின்சார இணைப்பே கிடையாது. விவசாயிகள் கடன் வாங்கி, டீசல் பம்புகளில் நீர்இறைத்து, நிலங்களுக்கு பாய்ச்சுகிறார்கள். உரங்களை அதிகாரிகளே பதுக்குவதால், கள்ளச்சந்தையில் வாங்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.இதன் காரணமா விளைபொருட்களின் அடக்கவிலை அதிகரித்துவிட்டது. அதற்கேற்ற விலையை அரசும், அதிகாரிகளும், வியாபாரிகளும் கொடுக்காததால்போராட்டம் வெடித்தது” என்றார்.