சீன அதிபர் ஏன் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை? வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரத்யேக பேட்டி!

By Manikanda Prabu  |  First Published Sep 18, 2023, 2:50 PM IST

ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஏன் கலந்து கொள்ளவில்லை என ஏசியாநெட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்


ஜி20 உச்சி மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இந்தியா தலைமையிலான இந்த மாநாட்டில் ஆப்பிரிக்க யூனியன் ஜி20 அமைப்பில் இணைக்கப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த டெல்லி பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேசமயம், ஜி20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு பதிலாக அந்நாட்டு அமைச்சர்கள் பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர்.

ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக ரஷ்ய அதிபர் பெரும்பாலும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை தவிர்த்து வருகிறார். எனவே, அது பெரிய விஷயமாக பார்க்கப்படவில்லை. ஆனால், சீனாவுடனான எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில், அந்நாட்டு அதிபர் கலந்து கொள்ளாதது பேசுபொருளானது.

Latest Videos

undefined

இது குறித்து ஊடகங்களில் பல செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கியுள்ளார். ஜி20 மாநாடு, இந்தியாவின் முயற்சிகள், ராஜதந்திரம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏசியாநெட்டுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில், மேற்கண்ட விஷயங்கள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியாவுடனான அதிருப்தி, எல்லைக் தகராறு, ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடு உள்ளிட்ட பல காரணங்களை நீங்கள் கற்பனை செய்யலாம். இதுபோன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரலாம். ஆனால், சீனா தனது பிரதிநிதியை அனுப்பியுள்ளது. அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் வராததற்கு பல காரணங்கள் உள்ளன.” என்றார்.

தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ஜெயசங்கர், “உலகப் பொருளாதாரத்தில் சமத்துவமின்மை இப்போது ஒழிக்கப்படுகிறது. உலகின் பல முக்கிய நாடுகளின் சந்தைகளை முன்பு சீனப் பொருட்கள், சீன வளங்கள் ஆக்கிரமித்திருந்தன. ஆனால் இப்போது மற்ற நாடுகளின் தயாரிப்புகள் உலக சந்தையில் கிடைக்கிறது. அவை உலக சந்தைகளை அவைகள் ஆக்கிரமிக்கின்றன. சீன சந்தை பதட்டமான சூழலை எதிர்கொண்டதால் பல நிறுவனங்கள் வெளியேறின. இதற்குப் பிறகு, கோவிட் தொற்றுநோய் வெடித்தது. இந்த நேரத்தில் பல நாடுகள் சீனாவுக்கு எதிராக நின்றன. இந்தியா தடுப்பூசியை உருவாக்கி பல நாடுகளுக்கு கொடுத்தது. அதன்பிறகு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. அந்த சமயத்தில், எரிபொருள் விலை உயர்வு, உணவு விலை உயர்வு உட்பட பல உலகளாவிய சவால்கள் எதிர்கொள்ளப்பட்டன. இப்போதும் 80-90களின் அதே கதைகளைச் சொல்லி, அதே மரபைத் தொடர முடியாது. இப்போது உலகம் மாறிவிட்டது. உலகமயமாக்கல் ஒவ்வொரு நாட்டையும் அதன் சொந்த திறனில் நிற்க வைக்கிறது. மேற்கத்திய நாடுகளில் இருந்து பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் பல நாடுகள் இல்லை.” என்றார்.

இந்தியாவின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அனைத்தும் வலுவாக உள்ளதாக தெரிவித்த அவர், “லத்தீன் அமெரிக்காவில் உள்ள அனைத்து போட்டியாளர்களையும் விட இந்தியாவின் இரு சக்கர வாகன சந்தை முன்னணியில் உள்ளது. மெக்சிகோ மற்றும் கொலம்பியாவில் இந்திய கார் விற்பனை முன்னணியில் உள்ளது. நமது விவசாயப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. முழுமையான தடுப்பூசியை இந்தியாவுக்கு கொடுத்துவிட்டு வெளிநாடுகளிலும் கொடுத்துள்ளோம்.” என்றார்.

சந்திரயான்3 மூலம் நிலவில் காலடி எடுத்து வைத்துள்ளோம்.இதன் மூலம் உலகளாவிய தெற்கின் குரலை இந்தியா வலுப்படுத்தியுள்ளது என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். “இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியா உதவி செய்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகள் இந்தியாவுடன் நிற்கின்றன. நமது நிலவு பயணத்தால் ஆப்பிரிக்க நாடுகள் பெருமிதம் கொள்கின்றன. பல நாடுகள் இந்தியாவை அடையாளப்படுத்துவதில் பெருமை கொள்கின்றன.” என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ஜி20இல் இந்தியா சாதித்தது என்ன? வெளியுறவுத்துறை அமைச்சர் பிரத்யேக பேட்டி!

பொருளாதார வழித்தட திட்டத்தில் இந்தியா பெரும் வெற்றி பெற்றுள்ளதாகவும், இத்திட்டத்தின் கீழ் வரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தை மனதில் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் ஜெய்சங்கர் தெரிவித்தார். இந்த வழித்தட திட்டம் உலக சந்தைக்கு திறப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.

கனடா உடனான உறவு குறித்து பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “கனடாவுடன் சிறந்த உறவை இந்தியா விரும்புகிறது. ஆனால், அரசியல் நோக்கத்திற்காக காலிஸ்தான் போராட்டத்திற்கு கனடா ஆதரவு அளித்ததுதான் பிரச்சனைக்கு காரணம். நாம் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இன்று போராட்டம் அல்லது அரசியல் காரணத்தை கனடா ஆதரித்தால் நாளை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

click me!