இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகள் வியக்கின்றன என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த சிறப்பு அமர்வு பழைய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு விடை கொடுக்கவுள்ளது. புதிய நாடாளுமன்றக் கட்டிடம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. முதல் நாள் கூட்டம் இன்று கூடியவுடன், ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் மோடி மக்களவையில் சிறப்பு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டு மக்களிடம் இருந்து தனக்கு கிடைக்கும் அன்பு மற்றும் மரியாதையைக் கண்டு வியப்பதாகக் கூறினார். முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் நாடாளுமன்றத்துக்கும், இந்திய ஜனநாயகத்துக்கும் ஆற்றிய பணிகளை ஒப்புக் கொண்ட பிரதமர் மோடி, இந்த கட்டிடத்தில் உறுப்பினராக முதன்முதலில் நுழைந்தபோது, மக்களிடமிருந்து இவ்வளவு அன்பைப் பெறுவேன் என்று தாம் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றார்.
“தேசத்திடம் இருந்து எனக்கு இவ்வளவு அன்பும் மரியாதையும் கிடைக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ரயில் நிலையத்தில் தூங்கிய சிறுவன் நாடாளுமன்றத்தில் பேசுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. இந்த நாட்டுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.” என்றார்.
வரலாற்று சிறப்புமிக்க பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு நாம் விடை கொடுக்க உள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, இந்திய நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால செயல்பாடுகள் குறித்து பெருமிதம் கொள்கிறேன். சுதந்திர போராட்டத்தின் சின்னமாக பழைய நாடாளுமன்றம் திகழ்கிறது. சுதந்திர இந்தியாவின் பல்வேறு பாரம்பரியங்களின் நினைவாக பழைய நாடாளுமன்றம் உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு சென்றாலும், இந்த கட்டடமும் நாட்டின் வளர்ச்சிக்காக செயல்படும் என்றார்.
ஜி20இல் இந்தியா சாதித்தது என்ன? வெளியுறவுத்துறை அமைச்சர் பிரத்யேக பேட்டி!
“இந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்திற்கு நாம் அனைவரும் விடை கொடுக்கவுள்ளோம். சுதந்திரத்திற்கு முன், இந்த மாளிகை ஏகாதிபத்திய சட்ட சபைக்கான இடமாக இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, இது பாராளுமன்ற மாளிகை என்ற அடையாளத்தைப் பெற்றது. இந்த கட்டிடத்தை கட்டும் முடிவு அந்நிய ஆட்சியாளர்களால் எடுக்கப்பட்டது என்பது உண்மைதான், ஆனால் இந்த கட்டுமானத்திற்காக உழைத்த உழைப்பும், பணமும் நம் நாட்டு மக்களுடையது என்பதை நாம் மறக்க முடியாது, பெருமையுடன் சொல்லலாம்.” என்று பிரதமர் மோடி கூறினார்.
“நாடாளுமன்றத்தின் நாங்கள் (எம்.பி.க்கள்) குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்கள். பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள் எப்பொழுதும் பிரச்சனைகள் இருக்கும் இருந்தாலும், தங்கள் பொறுப்புகளை அவர்கள் நிறைவேற்றியுள்ளனர். சிலர் சக்கர நாற்காலியில் வந்தனர், சிலர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர். தொற்றுநோய்களின் போது கூட, எம்.பி.க்கள் நாட்டிற்காக தொடர்ந்து பணியாற்றினர்.” என பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “தேசத்தின் வளர்ச்சிப் பணியில் நாட்டு மக்கள் தொடர்ந்து வியர்வை சிந்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் மாற்றத்திற்கான அலை உருவாகியுள்ளது. ஜி20 மாநாட்டின் வெற்றி இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் சொந்தம். இந்தியாவில் நடைபெற்ற G20 மாநாட்டில் ஆப்பிரிக்க ஒன்றியம் இணைக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்கது. நாம் முன் வைத்த பிரகடனத்தை ஜி20 நாடுகள் ஏற்றுக்கொண்டது இந்தியாவின் பலத்தை காட்டுகிறது. இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகள் வியக்கின்றன.” என்றார். மேலும், சுயதன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.