குஜராத் தேர்தல் முடிவுகளை சீனா ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது... ஏன் தெரியுமா?

First Published Dec 15, 2017, 4:11 PM IST
Highlights
Why China is watching Gujarat polls closely


குஜராத் தேர்தல் முடிவுகளை நாடே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது. அதற்குக் காரணம், நரேந்திர மோடியின் பிரசாரம். 

ஒரு நாட்டின் பிரதமராக இருந்து கொண்டு, மற்ற மாநில தேர்தல் பிரசாரங்களில் கலந்துகொண்டது போல் அல்லாமல், தன் சொந்த மாநிலம் என்பது ஒரு புறம் இருந்தாலும், குஜராத்தில் மட்டும் ஏன் அவ்வளவு தீவிரப் பிரசாரம் செய்தார் மோடி என்ற கேள்விகளை பலரும் முன்வைக்கின்றனர். 

தோல்வி பயம் பாஜக.,வுக்கு வந்துவிட்டது என்று களத்தில் போட்டியை கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சொல்கிறார்கள். இது வழக்கமான எதிர்க்கட்சிக்கே உரிய விமர்சனங்கள்தான் என்றாலும், ராகுல் காந்திக்கு ஒரு சோதனை தரும் களமாகவும் அது அமைந்துவிட்டது. அதனால் தானோ என்னவோ வரம்பு மீறிய பேச்சுகளெல்லாம் பிரசார மேடைகளில் இடம் பிடித்தன. 

அண்மைக் காலத்தில் மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு திட்டம், ஜிஎஸ்டி உள்ளிட்டவைகளால், குஜராத்தின் பெரும்பான்மை வர்த்தக சமூகம் பாதிக்கப் பட்டிருப்பதாகவும்,அவர்களின் கோபம் இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் பரவலாக கருத்துகள் பரப்பப் பட்டன. இந்த இரு திட்டங்களுக்குப் பின்னும், உத்தரப் பிரதேசத்தில் பாஜக., வென்ற போதும், குஜராத் களம் வேறு என்கிறார்கள் ஊடகங்களில். 

என்ன காரணமோ, குஜராத் தேர்தலில் பாகிஸ்தானின் கை இருக்கிறது என்று சொல்லிவிட்டார் மோடி. அதற்கு, தில்லியில் காங்கிரஸ் முக்கியத் தலைகளுடன் நடைபெற்ற பாகிஸ்தான் தூதருடனான ஒரு ரகசிய சந்திப்பை அம்பலப் படுத்தினார் மோடி. இப்படி அண்டை நாட்டின் கை ஒரு மாநிலத்தின் தேர்தலில் இருப்பதாக அவர் சொன்ன பின்னர், இந்தத் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது. 

இந்தியாவில் இத்தகைய எதிர்பார்ப்புகளும், கருத்து அலசல்களும் இருப்பது ஒரு புறம் என்றால், அண்டை நாடான சீனா, இந்தத் தேர்தல் முடிவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது. அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. இந்தத் தேர்தல், நரேந்திர மோடியின் கொள்கைகளுக்கு எதிராக இந்திய வாக்காளர்களின் மனப் பாங்கைக் காட்டும் அமிலச் சோதனையாகவே சீனா கருதுகிறது. இது சீனாவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறது சீன ஊடகக் கட்டுரை. 

சரி... ஆனால், இந்திய வாக்காளர்களின் மனப்பாங்குக்கு சீனா எப்படி பாதிக்கப்படும்? சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் கட்டுரையில், இந்தியாவின் பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள், சீனாவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது இந்தியாவுடனான சீனாவின் பொருளாதார பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் மேற்கொள்ளப்படும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள், சீனாவை உடனடியாக பாதிக்கும் என்று அது கருத்து தெரிவிக்கிறது. 

சீன நிறுவனங்களான ஓப்போ, ஜியோமி உள்ளிட்டவற்றின் வர்த்தகம், இதனால் பாதிக்கப்படும் என்று சீனாவின் குளோபல் டைம்ஸ் கூறுகிறது. குறிப்பாக, குஜராத்தில் மட்டும் மோடி பெரிய அளவில் வெற்றி பெற்று விட்டால், அவருடைய சுதேசி சார்பு பொருளாதார சீர்திருத்தங்கள் மேலும் தீவிரமடையும். இதனால் சீன நிறுவனங்களின் வர்த்தகம் இந்தியாவில் பாதிப்படையும். 

குஜராத்தில் மோடியின் பாஜக., தோற்றுவிட்டால், மோடியின் சீர்திருத்தத்திற்கு மக்கள் கொடுத்த பதிலடி என்றும், இது மோடியின் பொருளாதாரக் கொள்கைகளுக்கான மிகப் பெரிய பின்னடைவு என்றும் சீனா இதனைப் பார்க்கும் என்றும் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. 

தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், அது பாதிப்புதான் என்று குறிப்பிடும் அந்தக் கட்டுரையில்,  பாஜக., வெற்றி பெற்று ஆனால் வாக்கு சதவீதத்தில் குறைந்தாலும் கூட, அதுவே ஒரு சிகப்புக் கொடிதான்!  என்று குளோபல் டைம்ஸ் கூறுகிறது. 

ஆக மொத்தத்தில், குஜராத் தேர்தலில் பாகிஸ்தானின் பின்னணி இருக்கிறது என்று மட்டும் தான் மோடி சொன்னார். ஆனால், சீனாவின் கரமும் இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லி குளோபல் டைம்ஸ் ஒரு கட்டுரையில் தங்கள் நாட்டு அரசின் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது. 

click me!