
மத்தியப் பிரதேசத்தில் மதமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி கிறிஸ்தவர்கள் மீது இந்து அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுதும் உள்ள கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா அருகே உள்ள தாரா கலன் என்ற கிராமத்தில் கிறிஸ்துமஸ் வருவதையொட்டி நேற்று நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. கத்தோலிக்க பாதிரியர்கள் சிலரும், கிறிஸ்தவப் பாடல் குழுவினரும் கிறிஸ்துமஸ் பாடல்களை இசைத்தபடி ஊர்வலமாகச் சென்றனர்.
அப்போது அங்கு கூடியிருந்த இந்து அமைப்புகளை சேர்ந்த சிலர், மதமாற்றத்தில் ஈடுபடுவதாகக் கூறி கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். சம்பவம் அறிந்து உடனடியாக போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர். மதம் மாற்றுவதாக இந்து அமைப்பினர் புகார் கூறியதை அடுத்து கிறிஸ்தவ குழுவினரை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
எனினும் விடாமல் பின்தொடர்ந்து வந்த இந்து அமைப்பினர் காவல் நிலையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கிறிஸ்தவப் பாடல் குழுவினரின் வாகனத்திற்கு தீ வைத்து எரித்தனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குழுவாகச் சென்று கிறிஸ்துமஸ் பாடல்களை இசைப்பது வழக்கமான ஒன்றுதான். இரண்டு பாதிரியார்களும், பாடல் குழுவைச் சேர்ந்த 32 பேரும் சென்றபோது தாக்குதல் நடந்ததுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு தொடராமல், மதமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி போலீஸார் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து விசாரிப்பதற்காக காவல் நிலையம் சென்ற 8 பாதிரியார்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர் என பாதிரியார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், கிறிஸ்தவ மதத்திற்கு மாறுவதற்கு 5000 ரூபாய் தருவதாக கிறிஸ்தவ பாதிரியார்கள் கூறியது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதால் தான் அவர்களை கைது செய்ததாக போலீஸ் எஸ்.பி டி.டி.பாண்டே கூறியுள்ளார்.
பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்தில் கிறிஸ்தவ குழுவினரின் மீது இந்து அமைப்புகள் நடத்தியுள்ள தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.