ஐந்து மாநிலத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் முடியவுள்ளது. இதையடுத்து, அம்மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்ட தேர்தல் ஆணையம், அந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது.
அதன்படி, சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், மிசோரமில் நவம்பர் 7ஆம் தேதியும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும், ராஜஸ்தானின் நவம்பர் 25ஆம் தேதியும், தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. எதிர்வரவுள்ள 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜன் கி பாத் கருத்துக்கணிப்புப்படி, மொத்தம் 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் பாஜக 100-122 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் 62-85 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், மற்ற கட்சிகள் 14-15 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாஜக 100-123 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் 102-125 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், மற்ற கட்சிகள் 0-5 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் ஜன் கி பாத் கணித்துள்ளது.
மொத்தம் 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக 34-45 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் 42-53 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் ஜன் கி பாத் கணித்துள்ளது.
தெலங்கானாவில் வாக்குப்பதிவு நிறைவு: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மாற்றியமைப்பு!
ஜன் கி பாத் கருத்துக்கணிப்புகளின்படி, மொத்தம் 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி 10-14 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், ஜோரம் மக்கள் இயக்கம் 15-25 தொகுதிகள், காங்கிரஸ் 5-9 தொகுதிகள், பாஜக 0-2 தொகுதிகளில் வெற்று பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநிலத்தில் பிஆர்எஸ் கட்சி 40-55 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் 48-64 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், பாஜக 7-13 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி 4-7 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் ஜன் கி பாத் கணித்துள்ளது.