உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக தற்போது மூத்த நீதிபதியாக இருக்கும் உதய் உமேஷ் லலித்தை தலைமைநீதிபதி என்.வி.ரமணா பரிந்துரைசெய்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக தற்போது மூத்த நீதிபதியாக இருக்கும் உதய் உமேஷ் லலித்தை தலைமைநீதிபதி என்.வி.ரமணா பரிந்துரைசெய்துள்ளார்.
2022, நவம்பர் 8ம்தேதிவரை யு.யு.லலித் பதவிக்காலம் இருக்கிறது என்பதால் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாலும் 3 மாதத்துக்கு குறைவாகவே பணியில் இருப்பார்.
தலைமை நீதிபதியாக இருக்கும் என்.வி.ரமணாவின் பதவிக்காலம் வரும் 26ம்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, புதிய தலைமைநீதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அலுவலகத்திலிருந்து இருந்து தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு நேற்று கடிதம் அனுப்பப்பட்டது. அதில், அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம், அடுத்த மூத்த நீதிபதி யார் என்று கேட்டு அனுப்பப்பட்டது
தற்போது தலைமை நீதிபதியாக இருக்கும் என்.வி.ரமணாவுக்கு அடுத்ததாக மூத்த நீதிபதியாக யு.யு.லலித் மட்டுமே இருக்கிறார். ஆதலால், யு. யு .லலித்தை பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
யார் இவர்
கடந்த 1957ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி யுயு லலித்பிறந்தார். இவரின் குடும்பமே வழக்கறிஞர் குடும்பம். யுஆர் லலித் பரம்பரையில் யு. யு. லலித் வந்தவர். இவரின் தந்தை உதய் லலித் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியாவார்.
1983ம் ஆண்டு ஜூனில் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். அதன் பின் 1985ம் ஆண்டு டிசம்பர் வரை மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணி செய்தார்.
1986 முதல் 1992ம் ஆண்டுவரை முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரோப்ஜியுடன் இணைந்து யுயு லலலித் பணியாற்றியவர்.
அதன்பின் 1986ம் ஆண்டு ஜனவரி மாதம் டெல்லி வந்த யு.யு.லலித், 2004ம் ஆண்டுவரை டெல்லியில் பயிற்சி எடுத்து, மூத்த வழக்கஞராக பதவி உயர்ந்தார். 2011ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பில் சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞராக லலித்தை நியமித்து நீதிபதிகள் சிங்வி, ஏ.கே.கங்குலி அமர்வு உத்தரவிட்டது.
மூத்த வழக்கறிஞராக இருந்த லலித், நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக கடந்த 2014, ஆகஸ்ட் 13ம் தேதி நியமிக்கப்பட்டார்.
யு.யு.லலித் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால், வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு தலைமை நீதிபதியாக உயரந்த 2வது தலைமை நீதிபதி என்ற பெருமையைப் பெறுவார்.
கடந்த 1971ம் ஆண்டு 13-வது தலைமை நீதிபதியாக இருந்த எஸ்எம் சிக்ரி, வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் வழக்கறிஞர் ஆவார்.
சிறப்பு மிக்க தீர்ப்புகள்
யு.யு.லலித் ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அதில் குறிப்பாக முத்தலாக் முறையை ஒழித்து வழங்கிய தீர்ப்பு பிரபலமானது.
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்கும் உரிமை திருவிதாங்கூர் அரச குடும்பத்துக்கு இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கியதும் யு.யு. லதித் அமர்வுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளின் உடலை, உடலின் எந்த அந்தரங்க உறுப்பையும் தொடுதல், பாலியல் உள்நோக்கத்துடன் தொடுதல் போக்ஸோ சட்டத்தின் பிரிவு-7ன் கீழ் வரும் என்று யு.யு.லலித் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது.