ராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில் பாஜக சார்பாக சுரேந்திரன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. கேரள மாநிலத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டத்தில் ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலத்தின் வயநாட்டில் மீண்டும் போட்டியிடுகிறார்.
காங்கிரஸின் கோட்டையான வயநாடு மக்களவைத் தொகுதி 2009ஆம் ஆண்டு முதல் அக்கட்சியின் வசம் உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாட்டில் வெற்றி பெற்று சிட்டிங் எம்.பி.யாக உள்ளார். அந்த தேர்தலில் அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் அவர் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில், பாஜக தேசிய தலைமை தங்களது கட்சியின் 5ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் கூட்டணியில் இருந்தாலும், கேரளாவில் காங்கிரஸ், இடதுசாரிகள் எதிரெதிர் அணியில் உள்ளனர். அத்தகைய கேரள அரசியல் நிலப்பரப்பில் இடதுசாரிகளுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் சவால் விடும் குறிப்பிடத்தக்க பணியை சுரேந்திரன் மேற்கொண்டு வருகிறார்.
கோழிக்கோடை சேர்ந்த சுரேந்திரன், 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பத்தனம்திட்டா தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகளை அடுத்து, 3ஆம் இடம் பிடித்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் மஞ்சேஸ்வரத்தில் போட்டியிட்ட அவர் வெறும் 89 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2019ஆம் ஆண்டு இடைத்தேர்தலிலும் அவர் களம் கண்டார். ஆனால், அதிலும் அவர் தோல்வியடைந்தார்.
இருப்பினும், அவர் மீதுள்ள நம்பிக்கையால் 2024 மக்களவைத் தேர்தலிலும் பாஜக அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தையடுத்து, வயநாடு தொகுதி கவனம் ஈர்த்துள்ளது, திருவனந்தபுரத்தில் காங்கிரஸின் மூத்த தலைவரும், அந்த தொகுதியின் மூன்று முறை எம்.பி.யுமான சசி தரூரை எதிர்த்து பாஜக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் களம் காண்கிறார்.
கேரள மாநில பாஜக தலைவராக 2020ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட சுரேந்திரன், சபரிமலையில் இளம் பெண்கள் நுழைவதற்கு எதிரான போராட்டங்கலை முன் நின்று நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.