One Nation One Election | ஒரே தேர்தல் முறை - சாத்தியமா?

By Swaminathan Gurumurthy  |  First Published Mar 25, 2024, 10:25 AM IST

1971 வரை நடைமுறையில் இருந்த ஒரே தேர்தல் முறை எப்படி பிறகு மாறியது? ஒரே தேர்தல் முறையை ஏன், எப்படி மீட்டெடுத்து செயல்படுத்த முயல்கிறார் மோடி என்று பார்ப்போம்.


“1952 முதல் 1967 வரை ஒரே நாடு ஒரே தேர்தல் [One Nation One Poll] என்ற தேர்தல் முறையில் நம் நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலும், சட்டசபைத் தேர்தல்களும் சேர்ந்து நடந்து வந்தது. நாடு சுதந்திரம் பெற்றது முதல் 1967 வரை நடந்த 4 பொதுத் தேர்தல்களில் ஒரே தேர்தல் முறையை கடைப் பிடித்தது காங்கிரஸ். 1967-ல் தேர்வான சட்டசபையை நான்கே ஆண்டுகளில் கலைத்து, இந்திரா 1971 நாடாளுமன்றத் தேர்தலை நடத்த, அத்துடன் சேர்த்து தமிழக சட்டசபைத் தேர்தலை ஒரே முறையில் நடத்தியது தி.மு.க.. ஆனால் 1971 வரை ஒரே தேர்தல் முறையை கடைப்பிடித்த காங்கிரஸும், 1971-ல் கூட ஒரே தேர்தல் முறையை கடைப்பிடித்த தி.மு.க.வும் இன்று ஒரே தேர்தல் முறையை எதிர்ப்பது, அதற்கு மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் திட்டம் என்று சாக்கு கூறுவது நகைப்புக்குரியது. 1971 வரை நடைமுறையில் இருந்த ஒரே தேர்தல் முறை எப்படி பிறகு மாறியது? ஒரே தேர்தல் முறையை ஏன், எப்படி மீட்டெடுத்து செயல்படுத்த முயல்கிறார் மோடி என்று பார்ப்போம்.

ஒரே தேர்தல் முறை ஏன் தேவை?

அரசியல் சாஸனம் அமலானது தொடங்கி, 1967 வரை நம் நாட்டில் ஒரே தேர்தல் முறை இருந்தது என்பதே, 1970-க்குப் பிறகு வந்த பெரும்பான்மை வாக்காளர்களுக்குத் தெரியாது. ஒரே தேர்தல் முறை அவசியம் என்பதால்தான், 1956-ல் மொழிவாரி மாநிலங்கள் அமைந்தபோது, 7 மாநிலங்களின் சட்ட சபைகள் கலைக்கப்பட்டு, 1957 நாடாளுமன்றத் தேர்தலுடன் அந்த மாநிலத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அப்படி தீவிரமாக அமல்படுத்தப்பட்ட ஒரே தேர்தல் முறை எப்படி மாறியது? நாடாளுமன்றத் தேர்தல்களும், மாநிலத் தேர்தல்களும் எப்படி பிரிந்தன? அதனால் ஏற்பட்ட தவறான விளைவுகள் என்ன என்பது முதலில் புரிய வேண்டும். அப்போதுதான் மோடி இன்று திட்டமிடும் ஒரே தேர்தல் முறை புதிய திட்டமல்ல, முன்பு நடைமுறையில் இருந்ததுதான், அது மாறியதால் நேர்ந்த தவறுகளைச் சரிசெய்யும் திட்டம் அது என்பது விளங்கும்.

எப்படி ஒரே தேர்தல் முறை அலங்கோல தேர்தல் முறையானது? 1967-ல் காங்கிரஸ், பல மாநிலங்களில் பெரும்பான்மையை இழக்க, ‘ஆயா ராம் கயா ராம்’ மாடல் கட்சித்தாவல்களால் நிலையற்ற கூட்டணி அரசுகள் பதவிக்கு வருவதும், அரசுகள் கவிழ்வதும் வழக்கமாகியது. அதனால் பல மாநிலங்களில் தனித் தனியாக தேர்தல்கள் நடக்கத் தொடங்கியது. 1967-க்குப் பிறகு, 1972-ல் நடக்க வேண்டிய நாடாளுமன்றத் தேர்தலை, 1971-ல் நாடாளுமன்றத்தை, 4 ஆண்டுகளில் கலைத்து இந்திரா தேர்தல் நடத்த, நாடாளுமன்ற - சட்டசபைத் தேர்தல்கள் பிரிந்தன. 1989-ல் மத்தியில் காங்கிரஸ் பெரும்பான்மை இழக்க, அடுத்த 10 ஆண்டுகள் பதவிக்கு வந்த எதிர்க்கட்சி கூட்டணி அரசுகள் அடிக்கடி கவிழ, 10 ஆண்டுகளில் 5 நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்தன. இப்படித்தான் யாரும் திட்டமிடாமல்தான் ஒரே தேர்தல் முறை சின்னாபின்னமாகி, அரசியல் சாஸனம் வரைந்த பெரியோர்கள் கற்பனை செய்யாத ஒரு அலங்கோலமான ஜனநாயகத் தேர்தல் முறை வந்தது.

அதன் விளைவாக மத்தியில் 5 ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும்கட்சி, பிறகு நடக்கும் மாநிலத் தேர்தல்களில் தோல்வியுற்றால், அது மத்திய அரசை பாதிப்பதும், மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்றால், அதனால் மாநில சட்டசபைகளைக் கலைப்பதும், மாநில அரசுகள் கவிழ்வதும் போன்ற வக்கிர அரசியல் பாணி உருவாகியது. நம் நாட்டில் உருவான அரசியல் சீரழிவுக்கு, ஒரே தேர்தல் முறை மாறியதும் ஒரு காரணம் என்றால் அது மிகையல்ல. இப்போதைய நிலைக்கு மாற்று தேவை என்பதை நாட்டு நலனைப் பற்றி சிந்திக்கும் யாரும் மறுக்க முடியாது. எனவேதான் 1967 வரை நடைமுறையில் இருந்த நாட்டுக்கு அவசியமான ஒரே தேர்தல் முறையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் மோடி.

குழு பரிந்துரை

சின்னாபின்னமாகியிருக்கும் ஒரே தேர்தல் முறையை, எப்படி அரசியல் சாஸனத்தை உருவாக்கியவர்களின் நோக்கத்துக்கு ஏற்ப மீட்டெடுப்பது என்று ஆய்வு செய்து, பரிந்துரைக்க முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைத்தார் பிரதமர் மோடி. காங்கிரஸ் முன்னாள் தலைவர் குலாம் நபி ஆஸாத் இருந்த அந்தக் குழுவில், பலதரப்பட்ட நிபுணர்கள் இருந்தனர். ஒரே தேர்தல் முறை அவசியமா என்று 47 அரசியல் கட்சிகளின் கருத்தைக் குழு கேட்க, 32 கட்சிகள் ஒரே தேர்தல் முறையை ஆதரித்தன, 15 கட்சிகள் எதிர்த்தன. தேசியக் கட்சிகளில் காங்கிரஸ், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் எதிர்த்தன. நான்கு முன்னாள் தலைமை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகோய், எஸ்.ஏ.போப்டே, யு.யு.லலித் கருத்தையும் கேட்டது இந்தக் குழு. அவர்களும் ஒரே தேர்தல் முறை அவசியம் என்று கூறினர். இறுதியில் அந்தக் குழு ஒரே தேர்தல் முறை அவசியம் என்று பரிந்துரைத்தது. ஏன் என்பதற்குக் குழு கூறிய காரணங்களை சுருக்கமாக இங்கு தருகிறோம்.

ஏதாவது மாநிலங்களில் ஆண்டுக்காண்டு தேர்தல் என்ற சூழல் உருவாக, அது நாட்டின் அரசியலை நிலைகுலைய வைத்து, நிர்வாகம் சீர்குலைந்து, பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கிறது. 1950 முதல் 60 வரை மொத்தம் 25 முறை (மத்திய - மாநில) தேர்தல்கள் நடந்தன; 1961-70-ல் அது 46; அடுத்த 10 ஆண்டில் 71. (அதாவது - 1950-60 களைவிட மூன்று மடங்கு தேர்தல்கள்.) அடுத்த 10 ஆண்டில் 59; அதற்கடுத்த 10 ஆண்டில் 59 என்று ஆகி 2001-10, 10 ஆண்டுகளில் 62, 2011-20, 10 ஆண்டுகளில் 63 என்று நாட்டின் அரசியலே தேர்தல் மயமானது. 2021-23-ல் இதுவரை 23 தேர்தல்கள் நடந்திருக்கின்றன. இந்த நிலைக்கு மாற்றாக ஒரே தேர்தல் முறை வந்தால் ஜி.டி.பி. வளர்ச்சி 1.5% அதிகமாகும், விலைவாசி உயர்வது 1.1% குறையும், தேர்தல் இலவசங்கள், பட்ஜெட் துண்டு குறைந்து, அரசு முதலீடு அதிகமாகும். குற்றங்கள் கூட குறையும் என்கின்ற ஆய்வுகள். அலங்கோலமான இன்றைய தேர்தல் முறையில், நாட்டில் எங்காவது ஒரு தேர்தல் அறிவிப்புகளால் (தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக), 5 ஆண்டுகளில் 800 நாட்கள் (ஆட்சி காலத்தில் 44%) அரசாங்கத் திட்டங்கள் ஸ்தம்பிக்கின்றன அல்லது தாமதமாகின்றன. இதுவும் பொருளாதார வளர்ச்சி குறையக் காரணம். எனவே ஒரே தேர்தல் முறை அவசியம் என்று பரிந்துரைத்த குழு அதை எப்படி மீட்டெடுப்பது என்றும் கூறியது. செப்டம்பர் 2023-ல் அமைக்கப்பட்ட குழு, 191 நாட்கள் தொடர்ந்து பணி செய்து, 21,558 பேர்களிடமிருந்து கருத்துக்கள் பெற்று, 18,626 பக்கங்களில் அறிக்கை தந்தது ஒரு பிரம்மாண்ட சாதனை.

எப்படி நடைமுறைப்படுத்துவது?

சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தல்கள் ஒரே முறையில், ஒரே நேரத்தில் நடக்க, அரசியல் சாஸனத்தைத் திருத்த பரிந்துரைத்திருக்கிறது குழு. அது முதல்படி. அதற்கு மாநிலங்களின் ஒப்புதல் தேவை இல்லை. ஒரே முறையில் தேர்தல் நடந்த 100 நாட்களில், உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தவும் அரசியல் சாஸனத்தைத் திருத்த வேண்டும். அதற்குப் பாதிக்கு மேலான மாநிலங்களின் ஆதரவு தேவை. அப்படி அரசியல் சாஸனத் திருத்தம் செய்த பிறகு, ஒரே தேர்தல் முறையை தொடங்க, 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபிறகு, ஜனாதிபதி நாள் குறித்து (appointed date) அறிவிப்பார். அந்த அறிவிப்புக்குப் பிறகு நடக்கும் மாநிலத் தேர்தல்களில் தேர்வாகும் சட்டசபைகளின் காலம், நாடாளுமன்ற காலத்துடன் முடிந்துவிடும். உதாரணமாக 2024-ல் தேர்தலில் தேர்வாகும் நாடாளுமன்றம் 2029-ல் முடியும். 2024 தேர்தலுக்குப் பிறகு அரசியல் சாஸனம் திருத்தப்பட்டு, குறிப்பிட்ட தேதியை அறிவிப்பார் ஜனாதிபதி.

அதன் பிறகு 2024 முதல் 2029 வரை எந்த சட்டசபை தேர்வானாலும், அதன் காலவரையறை 2029 நாடாளுமன்றத்துடன் முடிந்துவிடும். இப்படித்தான் 2029-ல் அனைத்து சட்டசபை, நாடாளுமன்றத் தேர்தல்கள் ஒரே முறையில் நடக்கும். பிறகு சட்டசபை, நாடாளுமன்றம் இரண்டுக்கும் ஒரே நேரத்திலேயே தேர்தல் நடக்கும். ஒரே தேர்தல் முறை வந்தபிறகு மத்திய அரசு அல்லது மாநில அரசு ஒன்று கவிழ்ந்தால், அல்லது அரசமைக்க முடியாத நிலைமை உருவானால் மீண்டும் தேர்தல் நடக்கும். அதில் தேர்வான சபையின் காலம் 5 ஆண்டாக இருக்காது, அதில் மீதி இருக்கும் காலம் - ஒரு ஆண்டானாலும், ஒரு மாதமானாலும் - மட்டுமே அதன் முழு ஆயுட் காலம். இந்தத் திருத்தம் மத்திய - மாநில அரசுகள் கவிழாமல் இருக்கவும் வகை செய்யும்.

இந்தக் குழு பரிந்துரைப்பு ஜனநாயகத்துக்கும், நாட்டின் அரசியல் ஒழுங்குக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் அவசியம் என்பதில் சந்தேகமே இல்லை. இது நிறைவேற பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரும் 2024 தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. அதற்காகத்தான் மோடி பிரம்மப் பிரயத்தனம் செய்து வருகிறார். அவருடைய முயற்சி வெற்றி பெற்றால் மட்டுமே ஒரே தேர்தல் முறை சாத்தியம்.

Note to the Reader: This article originally appeared in Thuglak Tamil Weekly Magazine www.gurumurthy.net. It has been reproduced in Asianet News Network.

Tap to resize

Latest Videos

click me!