
Operation Sindoor: பாகிஸ்தான் பஞ்சாபில் உள்ள பயங்கரவாதிகளான ஜெ.இ.எம், எல்.இ.டி தலைமையகங்களை குறிவைத்து இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தி இருப்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா மீது தாக்குதல்
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளுக்கு எதிராக புதன்கிழமை அதிகாலையில் ஏவுகணைத் தாக்குதலில் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா குழுக்களின் தலைமையகங்களை இந்தியப் படைகள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இலக்கு வைக்கப்பட்ட ஒன்பது இடங்களில் பஹவல்பூரில் உள்ள ஜெ.இ.எம் தலைமையகம் மற்றும் முரிட்கேயில் உள்ள லஷ்கர் இ தொய்பா ஆகியவை அடங்கும். இவை இரண்டும் பாகிஸ்தான் பஞ்சாபில் உள்ளன. பஹவல்பூரில் மசூத் அசார் தங்கி இருப்பதாக செய்தி வெளியாகி வந்தது.
பஹல்காம் தாக்குதல் 26 சுற்றுலா பயணிகள் கொலை
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் தொடர்ந்து இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தி வந்தனர். கடந்த மாதம் காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் இதில் 26 இந்திய சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இது உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், பயங்கரவாதிகளின் இடத்தை தொடர்ந்து இந்தியா கண்காணித்து வந்தது.
விமானப் படை, ராணுவப் படை தாக்குதல்:
தொடர் கண்காணிப்புகளுக்குப் பின்னர் இன்று அதிகாலை விமானப்படை மற்றும் ராணுவப் படை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த முறை இரண்டு படைகளும் விமானப் படை, ராணுவப் படை இரண்டும் இணைத்து ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு முன்பு இதுமாதிரி ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியது இல்லை.
அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியாவுக்கு இந்தியா விளக்கம்:
இந்தியா எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க இந்திய மூத்த அதிகாரிகள் பல நாடுகளில் உள்ள தங்கள் சக அதிகாரிகளுடன் பேசி விளக்கம் அளித்துள்ளனர். இவற்றில் அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ரஷ்யா ஆகியவை அடங்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. புதன்கிழமை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத தளங்கள் மீது இந்தியா ராணுவத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் சாவோ பதற்றத்தில் உள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து லாகூர் மற்றும் சியால்கோட் சர்வதேச விமான நிலையங்களில் பாகிஸ்தான் அரசாங்கம் அவசரநிலையை அறிவித்துள்ளது.
இன்று காலை 10 மணிக்கு இந்தியா தரப்பில் விளக்கம்:
இன்று காலை பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்படும். முக்கியமாக இந்தியா பயங்கரவாதிகள் முகாம்களை, பயிற்சி இடங்கள், தலைமை இடங்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது (JeM) நிறுவனர் மற்றும் தலைவரான முகமது மசூத் அசார், ஒரு பயங்கரவாதியாக இருந்து வருகிறார். இது முக்கியமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) செயல்படுகிறது. மசூத் அசார், மே 1, 2019 அன்று, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலால் (UNSC) சர்வதேச பயங்கரவாதியாக பட்டியலிடப்பட்டார்.
மசூத் அசார் கடைசியாக எங்கு தங்கியிருந்தார்?
பயங்கரவாதத் தலைவர் மசூத் அசார் சிறையில் இல்லை. ஆனால் பாகிஸ்தானின் பாவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைமையகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இஸ்லாமாபாத் அவரைக் கைது செய்ததாக கூறினாலும், தகவல்கள் வேறு மாதிரியாக இருக்கிறது. மசூத் அசாரின் கடைசி இடம் பஹவல்பூரில் அமைந்துள்ள பயங்கரவாதக் குழுவின் தலைமையகமான மர்காஸ் சுபனால்லா என்று கூறப்பட்டது. இந்தியா தொடர்ந்து பஹவல்பூரை கண்காணித்து வந்த பின்னர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
ஹர்கத்-உல்-அன்சாருடனான மசூத் அசாரின் தொடர்பு
ஹர்கத்-உல்-அன்சார் என்ற பயங்கரவாத அமைப்பு 1993 இல் நிறுவப்பட்டது. மேலும் மசூத் அதன் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (CIA) 1998 இல் தனது அறிக்கையில், "காஷ்மீரில் இந்தியப் படைகளுக்கு எதிரான அதன் மறைமுகப் போரில் பாகிஸ்தான் ஆதரிக்கும் ஒரு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான HuA, மேற்கத்தியர்களுக்கு எதிராக பயங்கரவாத யுத்திகளுடன் செயல்பட்டு வருகிறது'' என்று தெரிவித்து இருந்தது.
கடத்தலில் ஹர்கத்-உல்-அன்சார்
1994 ஆம் ஆண்டின் முற்பகுதியிலிருந்து 1998 வரையிலான காலகட்டத்தில், ஹர்கத்-உல்-அன்சார் என்ற பயங்கரவாத அமைப்பு குறைந்தது 13 பேரைக் கடத்தியதாகவும், அதில் 12 பேர் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் சிஐஏ தெரிவித்துள்ளது.
மசூத் அசார் 1994-ல் ஸ்ரீநகருக்கு பயணம்
1994 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மசூத் அசார், ஹர்கத்-உல்-அன்சாரின் பகைமை பிரிவுகளான ஹர்கத்-உல்-ஜிஹாத் அல்-இஸ்லாமி மற்றும் ஹர்கத்-உல்-முஜாஹிதீன் இடையேயான பதட்டங்களைத் தணிக்க போலி அடையாளத்தின் கீழ் ஸ்ரீநகருக்குப் பயணம் செய்தார். அந்த நேரத்தில், இந்தியா பிப்ரவரியில் அனந்த்நாக் அருகே உள்ள கானாபாலில் அவரைக் கைது செய்து, அந்தக் குழுக்களுடன் அவர் செய்த பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக சிறையில் அடைத்தது. அவர் ஸ்ரீநகரில் உள்ள பாதாமி பாக் கண்டோன்மென்ட், டெல்லியில் உள்ள திகார் சிறை மற்றும் இறுதியாக ஜம்முவில் உள்ள கோட் பல்வால் சிறை ஆகியவற்றில் சிறையில் அடைக்கப்பட்டார். ஐசி-814 கடத்தலுக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.
விமானம் கடத்தலும், மசூத அசார் விடுதலையும்
நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு 154 பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம், ஐந்து பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. கடத்தல்காரர்கள் மூன்று உயர்மட்ட பயங்கரவாதிகளான மசூத் அசார், அகமது உமர் சயீத் ஷேக் மற்றும் முஷ்டாக் அகமது சர்கார் ஆகியோரை விடுவிக்குமாறு கோரி இருந்தனர்.
இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா தாக்குதல்
மசூத் அசார் மீது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயங்கரவாத வழக்குகள் இல்லாவிட்டாலும், அவர் பல தாக்குதல்களுக்குப் பொறுப்பான பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமது (JeM) இன் முக்கியத் தலைவராக உள்ளார். 2001 இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா தாக்குதல் போன்ற தாக்குதல்களுடன் JeM தொடர்புடையது. 2019 புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில், NIA குற்றப்பத்திரிகையில் JeM தலைவர் மசூத் அசாரும் ஒருவர்.