
பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் குறைந்தது 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 60 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதல்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள முக்கிய பயங்கரவாத முகாகளைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ளன.
ஸ்ரீநகருக்கு வெளியே உள்ள பாபோட் என்ற இடத்தில் குடியிருப்பு பகுதியில் பாகிஸ்தான் போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. வீழ்த்தப்பட்ட விமானம் F16 அல்லது JF-17 தண்டர் ரகத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அந்த விமானம் இந்திய வான்வெளியில் நுழைந்தபோது வீழ்த்தப்பட்டுள்ளது. போர் விமானத்தின் சிதைந்த பாகங்கள் அந்தப் பகுதியில் சிதறிக்கிடக்கின்றன. அந்தப் போர் விமானத்தில் பயணித்தவர்கள் பற்றி எந்த தகவலும் இல்லை.
இந்தத் துல்லியத் தாக்குதல்கள் கோட்லி, அஹ்மத்பூர் ஷர்கியா, முசாஃபராபாத், முரிட்கே மற்றும் ஃபைசலாபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பகுதிகள் பயங்கரவாத குழுக்களின் முக்கிய தளங்களாக கருதப்படுகின்றன.
சமீபத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த ஆபரேஷன் சிந்தூர் பயங்கரவாத குழுக்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
இந்திய இராணுவம் இந்த நடவடிக்கை மூலம் நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள பொதுமக்கள் மீதோ பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீதோ எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும், பாகிஸ்தான் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறிய செயல் என்றும், தகுந்த பதிலடி கொடுப்போம் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.