
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக இந்திய ராணுவம் தொடங்கிய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார். "பாரத் மாதா கீ ஜெய் (பாரத மாதாவுக்கே வெற்றி)" என்று அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கறியுள்ளார்.
26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா நடத்தியுள்ளது. இந்திய ராணுவப் படைகள் பாகிஸ்தானில் ஒன்பது இடங்களில் தாக்குதல் நடத்தி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
"சிறிது நேரத்திற்கு முன்பு, இந்திய ஆயுதப் படைகள் 'ஆபரேஷன் சிந்தூர்'-ஐ தொடங்கி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கின. அங்கிருந்துதான் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு இயக்கப்பட்டன" என்று மத்திய அரசின் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் மீது குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் செயல்படுத்தும் முறையிலும் இந்தியா நிதானத்தைக் காட்டியுள்ளது எனவும் மத்திய அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.