பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் அவருடன் ஒரு பெண் அவ்வப்போது காணப்படுவார். அவர் யார் என்று பலருக்கும் தெரியாது.
அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு இருந்தபோது, அந்தப் பெண் உடன் இருந்தார். இவர் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் தொழில்முனைவோராக இருந்து வருகிறார். பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும்போது அவரது பேச்சை மொழி பெயர்ப்பவராகவும், கருத்துக்களுக்கு விளக்கம் அளிப்பவராகவும் இருக்கிறார்.
பிரதமர் மோடி இன்று உலகத் தலைவர்களில் பிரபலமானவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அடிக்கடி இவர் பல்வேறு நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது இவரது பேச்சை மற்ற நாட்டுத் தலைவர்களுக்கு எடுத்துரைக்கவும், விளக்கம் அளிக்கவும் ஒருவர் தேவைப்படுகிறார். அந்த வகையில் தேர்வானவர்தான் குர்தீப் கவுர் சாவ்லா. பாரதிய பாஷா சேவா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் இயக்குனராக இருக்கிறார் குர்தீப் கவுர் சாவ்லா. இந்த நிறுவனம் சிலிக்கான் வேலியில் இருக்கிறது.
குர்தீப் கவுர் சாவ்லாவுக்கு மொழி பெயர்ப்பில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் இருக்கிறது. கார்பரேட் மற்றும் அரசு சார்ந்த துறைகளுக்கு மொழி பெயர்ப்பு பணிகளை இவரது நிறுவனம் செய்து வருகிறது. டெல்லியில் இருக்கும் செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பி.ஏ., (Hons), முதுகலையில் எம்.ஏ., ஆங்கில பட்டமும் பெற்று இருக்கிறார். இத்துடன் பொலிடிகல் சயின்ஸ் பாடத்தில் முதுகலை பட்டமும், பிஎச்.டி., பட்டமும் பெற்று இருக்கிறார். இந்திய நாடாளுமன்றம், கலிபோர்னியா நீதிமன்ற கவுன்சில், அமெரிக்க அரசு துறைகளில் பயிற்சி பெற்றவர்.
வெளிநாட்டுப் பயணங்களில் மோடியின் இந்தி பேச்சை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பார். அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி சென்று இருந்தபோது அதிபர்கள் பாரக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் உடனான பேச்சுவார்த்தைகளின்போது பிரதமரின் பேச்சை மொழி பெயர்த்தார்.
கடந்த1990 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தில் தனது 21 வயதில் மொழி பெயர்ப்பாளராக பணியை துவக்கினார் குர்தீப் சிங் சாவ்லா. இதன் பின்னர் தனது கணவர் பணி மாறுதல் பெற்ற பின்னர் அமெரிக்காவுக்கு 1996ல் இடம் பெயர்ந்தார். அங்கு தொழில் துவங்கினார்.
இந்தியாவுக்கு 2010ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வருகை தந்த இருந்தபோது, டெல்லிக்கு வருமாறு குர்தீப் கவுருக்கு ஒபாமா குழு அழைப்பு விடுத்து இருந்தது. 2015 குடியரசு தின பேரணியின்போது, பாரக் ஒபாமாவின் பேச்சை மொழி பெயர்த்து இருந்தார். இன்று அமெரிக்கா, கனடா, இந்தியா அனைத்து நாடுகளிலும் பெரிய தலைவர்களின் பேச்சை மொழி பெயர்த்து வருகிறார். பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர்கள் பாரக் ஒபாமா, டொனால்ட் டிரம்ப், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருக்கு வலுவான குரல்களை பதிவு செய்து வருகிறார்.