Who is DK Shivakumar?: கர்நாடக துணை முதல்வராகும் டி.கே. சிவகுமார்! அரசியலில் முன்னேறியது எப்படி?

By SG Balan  |  First Published May 18, 2023, 5:48 PM IST

காங்கிரஸ் கட்சிக்காகப் போராடும் வலிமையான சக்தியாகக் கருதப்படும் டி.கே. சிவக்குமார் புதிதாகப் பொறுப்பேற்கும் காங்கிரஸ் அரசில் துணை முதல்வராக பதவியேற்க உள்ளார்.


வொக்கலிகா தலைவர்:

நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, கடந்த காலங்களில் பல முக்கியமான சந்தர்ப்பங்களில், காங்கிரஸ் கட்சிக்காகப் போராடும் வலிமையான சக்தியாக இருந்தவர் டி.கே. சிவக்குமார். தேர்தலுக்கு முன் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்ட அவர், வொக்கலிகா சமூகத்தினர் மத்தியில் செல்வாக்கு மகுந்த காங்கிரஸ் தலைவராகவும், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருப்பவர். முதல்வர் பதவிக்கான வலுவான போட்டியாளராக இருந்த டி.கே. சிவக்குமார், தற்போது அந்த மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்க உள்ளார்.

Latest Videos

கர்நாடகாவில் வொக்கலிகாக்கள் சமூகம் லிங்காயத்துகளுக்கு அடுத்தபடியாக இரண்டாவது ஆதிக்கம் செலுத்தும் சமூகமாக உள்ளது. காந்தி குடும்பத்திடம் நம்பகமானவர் என்று பெயர் பெற்ற இவர், 8 முறை எம்எல்ஏவாக இருந்திருக்கிறார். கட்சிக்கு சிக்கல் வரும்போதெல்லாம் முன்னின்று போராடும் நபராக செயல்பட்டு வந்துள்ளார்.

ரிசார்ட் அரசியல்:

2002ஆம் ஆண்டு கர்நாடகாவின் அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் அப்போதைய விலாஸ்ராவ் தேஷ்முக் அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்தவர் டி.கே. சிவகுமார்தான். நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை எதிர்கொண்ட தேஷ்முக், சிவகுமாருடன் தொடர்பு கொண்டார். மகாராஷ்டிர எம்.எல்.ஏக்களை பெங்களூரு புறநகரில் உள்ள தனது ரிசார்ட்டில் ஒரு வார காலம் தங்கவைத்தார். பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தேஷ்முக் அரசு வெற்றி பெற்றது. 

2007ஆம் ஆண்டு குஜராத்தில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் மறைந்த அகமது படேல் வெற்றி பெறுவதை உறுதி செய்வதிலும் டி.கே. சிவகுமார் முக்கிய நபராக இருந்தார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ஒரு ரிசார்ட்டில் ஒன்றுகூடி தங்கவைத்திருந்தார்.

வழக்குகள், விசாரணைகள்:

2018 செப்டம்பரில் அமலாக்கத்துறை சிவக்குமார் மீதும் டெல்லியில் உள்ள கர்நாடக பவனில் பணிபுரிந்த ஹனுமந்தையா உள்ளிட்டோர் மீதும் பணமோசடி வழக்கு பதிவு செய்தது. வரி ஏய்ப்பு மற்றும் ஹவாலா பரிவர்த்தனை தொடர்பாக பெங்களூரு நீதிமன்றத்தில் சிவக்குமார் உள்ளிட்டோர் மீது வருமான வரித்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சிவக்குமார் மற்றும் அவரது கூட்டாளி எஸ்.கே.சர்மா ஆகியோர் குற்றம்சாட்டப்பட்ட மற்ற மூன்று பேரின் உதவியுடன் 'ஹவாலா' சேனல்கள் மூலம் கணக்கில் காட்டப்படாத பெரும் தொகை சம்பாதித்துள்ளதாக வருமானவரித்துறை குற்றம் சாட்டியுள்ளது.

வருமான வரித்துறை, அமலாக்கத் துறை சார்பில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தொடர் சோதனைகள் நடைபெற்றுள்ளன. தீவிர விசாரணைக்குப் பிறகு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் செப்டம்பர் 3, 2019 அன்று சிவக்குமார் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அக்டோபர் 23, 2019 அன்று அவருக்கு ஜாமீன் கிடைத்தது. மே 26, 2022 அன்று, சிவக்குமாருக்கு எதிராக அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

சொத்து விவரம்:

2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ₹1,413 கோடி சொத்துக்களுடன் போட்டியிட்ட மூன்றாவது பணக்கார வேட்பாளராக இருந்தவர் டி.கே. சிவக்குமார். 1962ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி கனகபுராவில் தொட்டலஹள்ளி கெம்பேகவுடா மற்றும் கவுரம்மா தம்பதியருக்கு மகனாக பிறந்த சிவக்குமார் ஆரம்பம் முதலே தீவிர காங்கிரஸ்காரர். மாணவப் பருவம் முதலிலேயே கட்சியில் செயல்பட்டு வருகிறார்.

1980களில் மாணவர் தலைவராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், படிப்படியாக காங்கிரஸ் கட்சியில் உயர்ந்தார். அவர் தனது 27வது வயதில் 1989 இல் சத்தனுர் சட்டமன்றத் தொகுதியில் தனது முதல் தேர்தலில் போட்டியிட்டார். 2004ஆம் ஆண்டு வரை நான்கு முறை அந்த் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றிருக்கிறார். பின், தன் சொந்தத் தொகுதியான கனகபுராவில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார்.

துணை முதல்வர்:

கடந்த 3 தேர்தல்களிலும் கனகபுரா தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றிருக்கும் சிவகுமார், 2023 தேர்தலில் 1,43,023 வாக்குகள் பெற்று அமோக வெற்றி அடைந்தார். தேர்தல் முடிவு வெளியானதும் செய்தியாளர்களிடம் உணர்ச்சிவரப்பட்ட சிவக்குமார், "மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். கட்சி தொண்டர்களுக்கும் கட்சியின் அனைத்துத் தலைவர்களுக்கும் ஆதரவாக இருந்தனர். நாங்கள் கூட்டாகப் பணியாற்றியுள்ளோம்" தெரிவித்தார்.

நான்கு முறை அமைச்சராக இருந்த டி.கே. சிவகுமார், நாளை 2வது முறையாக முதல்வராகும் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில் துணை முதல்வர் பதவியை ஏற்கிறார். 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் டி.கே. சிவகுமாரின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்று கருதப்படும் சூழலில், அதுவரை சிவகுமார் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் நீடிப்பார் என கட்சித் தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடி:

அண்மையில் மத்திய புலனாய்வு அமைப்புகளில் ஒன்றான சிபிஐ-க்கு இயக்குநராக கர்நாடக காவல்துறை டிஜிபியாக இருக்கும் பிரவீன் சூத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த 2 ஆண்டுகள் பிரவீன் இந்தப் பதவியில் நீடிக்க இருக்கிறார். இதனால் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி உருவாக வாய்ப்பு உள்ளது. சித்தராமையா, டி.கே. சிவகுமார் இருவரும் பிரவீன் சூத் பாஜகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சினர் மீது வழக்குப்பதிவு செய்துவருகிறார் என குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக, ஏற்கெனவே சிபிஐ வழக்கை எதிர்கொண்டுவரும் டி.கே. சிவகுமாருக்கு பிரவீன் சூத் சிபிஐ இயக்குநர் ஆனது சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

click me!