தேர்தலில் யாருக்கேனும் சாதகமாக அலை வீசுதா..? வாக்குப்பதிவை வைத்து சுவாரசியமான கருத்துக்கணிப்பு!

By Asianet TamilFirst Published Apr 30, 2019, 6:46 AM IST
Highlights

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பாஜக பிரதான அரசியல் கட்சியல்ல. இங்கே பிராந்தியக் கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பாஜக பிரதானமாக உள்ளது. ஆனால், பிராந்தியக் கட்சிகள் அதற்கு எதிராக ஒரு கூட்டணியை உருவாக்கி உள்ளன. 

நடைபெற்றுவரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு ஆதரவான அலையோ அல்லது எதிரான அலையோ வீசவில்லை என்பதோடு இந்தத் தேர்தலில் எந்த அலையும் இல்லை என வாக்குப்பதிவு அம்சங்களை வைத்து கணிக்கப்பட்டிருக்கிறது

.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும்போது, தற்போது மூன்று கட்டங்களாக நடந்துள்ள தொகுதிகளில் மிதமான அல்லது குறைந்த வாக்குப்பதிவே பதிவாகியுள்ளது.  முதல் கட்டத்தில் வாக்குப்பதிவு  69.5 சதவீதமாக இருந்தது, இது கடந்த தேர்தலைவிட 1.5 சதவீதம் அதிகம். இரண்டாவது கட்டமாக 69.4 சதவீத வாக்குகள் பதிவானது. இது 2014 தேர்தலைவிட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தது. மூன்றாவது கட்டத்தில் 67.8 சதவீத வாக்குப்பதிவு இருந்தது. இது 2014 தேர்தலைவிட 1.8 சதவீதம் அதிகம்.
பொதுவாக ஓர் அலை உள்ள தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகும். உதாரணமாக 1977-ம் ஆண்டில் முந்தைய மக்களவை தேர்தலுடன் (1971) ஒப்பிடும்போது 5 சதவீத வாக்குகள் அதிகரித்திருந்தது. இதேபோல 1980 மக்களவை தேர்தலைவிட 1984-ல் 8 சதவீதம் வாக்குப்பதிவு உயர்ந்தது. 2009-ம் ஆண்டைவிட 2014-ல் 8 சதவீதம் வாக்குப்பதிவு அதிகரித்திருந்தது. ஆனால், 2019 தேர்தலில் முதல் மூன்று கட்டங்களில் மொத்த வாக்குப்பதிவில் எந்த அதிக மாற்றமும் இல்லை. சில தொகுதிகளின் நிலை மாறுபட்டு காணப்படுகிறது.
பாஜகவை ஆதரிக்காதவர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டவில்லை என  சிஎஸ்டிஎஸ் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதன் இயக்குனர் சஞ்சய் குமார்  கூறும்போது, “மூன்று சுற்றுகளின் முடிவில் எந்த அலையும் தோன்றவில்லை. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் பாஜக பிரதான அரசியல் கட்சியல்ல. இங்கே பிராந்தியக் கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பாஜக பிரதானமாக உள்ளது. ஆனால், பிராந்தியக் கட்சிகள் அதற்கு எதிராக ஒரு கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணிகள் பாஜகவுக்கு பல சவால்களை உருவாக்கியுள்ளன.


பீகார் அல்லது மகாராஷ்டிராவைவிட பிராந்தியக் கட்சிகளின் கூட்டணிக் கட்சிகள் உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்கு சவாலாக உள்ளன. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களை பாஜக  நம்புகிறது. ஆனால், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பிஜூ ஜனதா தளத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
இன்னும் 3 கட்டத் தேர்தல்கள் உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் எந்த மாதிரியான அலை வீசுகிறது என்பதைத் தெள்ளத் தெளிவாக அறிய மேலும் சில நாட்கள் பிடிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

click me!