நல்லா வேடிக்கை பாருங்க ஆபிஸர்ஸ்... தேர்தல் ஆணையத்தை போட்டுத் தாக்கிய ப.சிதம்பரம்!

By Asianet TamilFirst Published Apr 29, 2019, 8:34 AM IST
Highlights

பாஜகவால் நிச்சயமாக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது. மத்தியில் பாஜக அல்லாத அரசே அமையும். காங்கிரஸும் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கட்சிகளுமே அதில் முக்கிய பங்கு வகிக்கும். எங்கள் கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றினால் 3-வது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. 

தேர்தலில் பாஜகவின் அத்துமீறல்களை தேர்தல் ஆணையம் மெளனமாக வேடிக்கை பார்த்துவருகிறது என்று காங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

 
டெல்லியில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு ப.சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், “தேர்தல் ஆணையம் இந்திய மக்களை பெரிதும் ஏமாற்றி விட்டது. பாஜகவின் அத்துமீறல்கள், பிரதமர் மோடியின் உரைகள், பாஜகவால் செலவழிக்கப்படும் பெருமளவிலான பணம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் மவுனமாக வேடிக்கை பார்த்துவருகிறது.மாறாக எதிர்க்கட்சி வேட்பாளர்களின் சிறு செலவுகள் என்று கூறப்படுவதைக்கூட அவர்களுடைய செலவுக் கணக்கில் அதிகாரிகள் சேர்த்துவிடுகிறார்கள்.
இந்த நடவடிக்கையை பாஜக மீது மேற்கொண்டால், அக்கட்சியின் எல்லா வேட்பாளர்களும் தகுதியிழப்புக்கு ஆளாக வேண்டிவரும். தற்போது தேர்தலில் தனது தோல்வியை மறைக்க ‘தேசபக்தி’ என்ற கோஷத்தை எழுப்பி வருகிறார்கள். பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இங்கே எல்லோரும் தேசவிரோதிகளாக இருந்தார்களா? எல்லோரும் தேச பக்தர்கள்தான். எந்தத் தேச பக்தரையும் தேச விரோதியாகக் கருத முடியாது. ஆனால், ஊடகங்களை கையில் போட்டுக்கொண்டு, இந்த பிரசாரத்தை பாஜக முடுக்கிவிட்டுள்ளது. 
பாஜகவால் நிச்சயமாக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது. மத்தியில் பாஜக அல்லாத அரசே அமையும். காங்கிரஸும் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கட்சிகளுமே அதில் முக்கிய பங்கு வகிக்கும். எங்கள் கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றினால் 3-வது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள், நிலையான அரசு அமைய காங்கிரசை ஆதரிக்க வாய்ப்புகள் உள்ளன. எல்லா மதச்சார்பற்ற முற்போக்குக் கட்சிகளும் நிலையான அரசு அமைய ஒன்று சேரும்.”
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

click me!