
ஏர் இந்திய நிறுவனத்தை தனியார் மயம் ஆக்கும் மத்திய அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயம், எங்களுக்கு இருக்கும் ஊதிய நிலுவைகள் கொடுப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று விமான ‘பைலட்’ சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் ஏறக்குறைய ரூ. 52 ஆயிரம் கோடி கடனில் சிக்கி இருப்பதால், அதை தனியாரிடம் விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த 2012ம் ஆண்டில் இருந்து ஏர் இந்தியா நிறுவனம் கடுமையான நஷ்டத்தை சந்தித்ததால், ஊழியர்களுக்கும், பைலட்களுக்கும் ஊதியக் குறைப்பை நடைமுறைப்படுத்தியது.அதேசமயம், பைலட், விமானத்தில் பணியாற்றும் பணியாளர்கள் என 27 ஆயிரம் ஏர்-இந்திய ஊழியர்களுக்கு ரூ.1,200 கோடி ஊதிய நிலுவை இருந்தது. இதில் பைலட்களுக்கு மட்டும் ரூ.400 கோடி ஊதிய நிலுவை இருந்தது.
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அஸ்வானி குமார் பொறுப்பு ஏற்றபின், அடுத்த 2 ஆண்டுகளில் அனைத்து ஊதிய நிலுவையும் படிப்படியாக தரப்படும் என உறுதி அளித்து இருந்தார்.
இந்நிலையில், அரசு ஏர் இந்தியா நிறுவனத்தில் ஏற்படும் இழப்பைச் சுட்டிக்காட்டி அதை தனியார் மயமாக்க முயற்சித்து வருகிறது. இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயம் ஆக்கும் முடிவு குறித்து அரசு முடிவு எடுக்கும் முன், ஊதிய நிலுவை குறித்து முதலில் முடிவு எடுக்க வேண்டும் என பைலட் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இந்திய பைலட் கில்ட் அமைப்பு கூறுகையில், “ ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்குவதை வரவேற்கிறோம். அரசின் தலையீடு இல்லாத கட்டுக்கோப்பான நிர்வாகத்தில் பணியாற்ற விரும்புகிறோம். அதே சமயம், இந்த முடிவு எடுக்கும் முன் எங்களுக்கு இருக்கும் ஊதிய நிலுவைகளை முதலில் கொடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளது.
இதேபோல, இந்திய வர்த்தக விமான பைலட் அமைப்பு கூறியுள்ளது. அந்த அமைப்பு கூறுகையில், “ தனியார் போன்ற திறமையான நிர்வாகம் ஏர் இந்தியாவுக்கு வந்தால், விமான நிறுவனம் வளர்ச்சி அடையும். தனியார் மயம் ஆக்குவதற்கு முன், எங்களுக்கு இருக்கும் ஊதிய நிலுவையை முதலில் கொடுக்க வேண்டும். தனியாரிடம் விற்கப்பட்டால், ஊதிய நிலுவை இருக்காது. தற்போது சந்திக்கும் பிரச்சினைகளை சந்திக்கமாட்டோம்’’ எனத் தெரிவித்துள்ளது.
தொடக்கத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாரிடம் விற்பனை செய்ய பைலட்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இப்போது தனியார் மயத்தை வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.