
இந்திய கடற் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடல் சீற்றம் ஏற்பட்டது குறித்து, இந்திய தேசிய கடல்சார் சேவை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய கடற்கரைப் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் மிகப் பெரிய அலைகள் எழுந்து அச்சுறுத்தின. சுமார் 12 மணி மீட்டர் உயரம் வரை அலை எழும்பியது. அலையின் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி பகுதியில் சுமார் 150 மீட்டர் தூரம் வரை கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. கடற்கரையில் இருந்த வீடுகள் கடல் சீற்றத்தால் சேதமாகின. இதேபோல் நாட்டின் பல்வேறு கடற்கரை அருகில் இருந்த வீடுகள் கடற்சீற்றத்தால் மிகுந்த சேதமாகின,
இந்த நிலையில், அரேபிய கடல், வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் பகுதிகளில் எழுந்த அலைகளின் சீற்றம் குறித்து இந்திய தேசிய கடல்சார் சேவை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்திய கடற் பகுதியில் இருந்து 10 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் பலம் வாய்ந்த அலைகள் கடந்த 18 ஆம் தேதி உருவானது. இந்த அலைகள் இந்திய கடற்பகுதியைக் கடக்கும்போது, அரேபியக் கடல், வங்காள, இந்திய பெருங்கடலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக 12 மீட்டர் உயரத்துக்கும் அதிகமான அலைகள் உருவாகின.
பல மாநிலங்களில் கடற்கரைப் பகுதிகளில் ஒருவாரமாக கடல் கொந்தளிப்புடனும், ஆக்ரோஷமாகவும் அலைகள் எழுந்தன. இந்த கடலலை சீற்றத்தால், உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஆனாலும், கடற்கரை பகுதிகளில் இருந்த வீடுகள், படகுகள் கடுமையாக சேதமடைந்தன. ஆந்திரபிரதேசம், மேற்குவங்கம், ஒடிசா, அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள், கோவா, மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, தமிழகம் ஆகிய கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் குறித்து கடந்த வாரம் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இது குறித்து, இந்திய தேசிய கடல்சார் சேவை மையத்தின் இயக்குநர் ஹெனோய் கூறும்போது, தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் கடந்த 18 ஆம் தேதி, மிக சக்திவாய்ந்த அலைகள் உருவாகி, அங்கிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து, இந்திய கடற்பகுதிக்குள் மிக சக்தி வாய்ந்த கடலலைகளை உருவாக்கிவிட்டுச் சென்றன.