நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு சிலிண்டர் இணைப்புகளை வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா பற்றி தெரிந்து கொள்ளலாம்
சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் அனைத்து நுகர்வோருக்கும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.200 குறைத்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதேசமயம், உஜ்வாலா சிலிண்டர் பயனர்களுக்கு சிலிண்டர் விலை ரூ.ரூ.400 குறைவாக கிடைக்கும். ஏற்கனவே உஜ்வாலா சிலிண்டர் பயனர்களுக்கு ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது. எனவே, பொது அறிவிப்போடு சேர்த்து அவர்களுக்கு மொத்தம் ரூ.400 குறைக்கப்படுகிறது.
மேலும், ரக்ஷாபந்தன், ஓணம் பண்டிகையையொட்டி, பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக, 75 லட்சம் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உஜ்வாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 9.6 கோடி பயனாளர்கள் உள்ளனர்.
undefined
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்றால் என்ன?
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டம், கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஏழைகள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப பெண்களுக்கு கேஸ் இணைப்பு மற்றும் சிலிண்டர்கள் வழங்குப்படுகிறது. இப்போது உஜ்வாலா 2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் முதல் கட்டமாக 2016 முதல் 2019 வரை 8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், ஏழைக் குடும்பங்களுக்கு விரைவான எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2023, மார்ச் 1 நிலவரப்படி 9.59 கோடி பேர் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனடைந்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில், ஏழைகளுக்கு குறைந்த அளவு சமையல் எரிவாயு (எல்பிஜி) கிடைத்து வந்தது. எல்பிஜி சிலிண்டர்களின் உபயோகம் நகர்ப்புற மற்றும் இரண்டாம் கட்ட நகர்ப்புற பகுதிகளில் உள்ளது, பெரும்பாலும் நடுத்தர வர்க்கம் மற்றும் வசதியான குடும்பங்களில் முன்பு பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், ஏழை எளிய மக்கள் சமையல் செய்வதற்கு மரக்கட்டைகளை பயன்படுத்தி வந்தனர். இதில் இருந்து வெளியேறும் புகை உடல்நலத்திற்கு பெரிய அளவில் கேடு விளைவித்து வந்தது.
உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி, தூய்மையற்ற சமையல் எரிபொருளால் இந்தியாவில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் உயிரிழப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த அகால மரணங்களில் பெரும்பாலானவை இதய நோய், பக்கவாதம், நாள்பட்ட நுரையீரல் நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றால் நிகழ்வதாக தெரிய வந்தது. உட்புற காற்று மாசுபாடு குழந்தைகளின் சுவாச நோய்களுக்கு காரணமாக அமைந்தது. நிபுணர்களின் கூற்றுப்படி, சமையலறையில் திறந்தவெளி நெருப்பில் சமைப்பது என்பது ஒரு மணி நேரத்திற்கு 400 சிகரெட்டுகளை எரிப்பது போன்றதாகும்.
இந்த நிலையில்தான், பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், முதற்கட்டமாக 8 கோடி பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்புகளை வழங்க மோடி அரசாங்கம் ரூ 12800 கோடி செலவிட்டுள்ளது. மேலும், அடுப்பு வாங்குவதற்காக கடன்களை வழங்கியுள்ளது. 6.3 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் இந்த வசதியைப் பயன்படுத்தினர். ரூ. 10100 கோடிக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது. கடனானது வட்டி இல்லாதது மற்றும் தளர்வான திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் காரணமாக இன்னும் 5000 கோடி ரூபாய் பயனாளிகளிடம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உஜ்வாலா 2.0 திட்ட இணைப்புகளை வழங்குவதற்காக அரசாங்கம் ரூ. 2500 கோடிக்கு மேல் செலவிட்டது. மேலும், உஜ்வாலா பயனாளிகளுக்கு இலவச ரீஃபில், இலவச அடுப்புகளை வழங்குவதற்காக ரூ. 3200 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு தலா ரூ. 200 மானியத்தை அரசு தொடங்கியுள்ளது. இதற்காக அரசாங்கம் 2022-23 ஆம் ஆண்டில் 6000 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு 7500 கோடி செலவிடவுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் விளைவாக, கடந்த 2014ஆம் ஆண்டு 55.9 சதவீதமாக இருந்த நாட்டின் எல்.பி.ஜி பயனாளிகளின் எண்ணிக்கை, 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 105.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் போது, 2020ஆம் ஆண்டில் பிரதான் மதிரி கரீப் கல்யான் யோஜனா திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், உஜ்வாலா பயனாளிகளுக்கு ரூ.9670.41 கோடி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம், 14.17 எல்பிஜி சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும், இந்த திட்டம் அமலான பிறகு, பெண்களுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் பெரிதும் குறைந்துள்ளதாகவும், அவர்கள் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.
பிரதமர் உஜ்வாலா திட்டத்துக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
பட்டியலின, பழங்குடியினர், பிரதமரின் ஆவாஸ் யோஜானா, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், அந்த்யோதயா அன்ன யோஜனா பிரிவுகள், தேயிலை மற்றும் முன்னாள் தேயிலை தோட்ட பழங்குடியினர், வனவாசிகள், தீவுகள் மற்றும் நதி தீவுகளில் வசிக்கும் மக்கள், SECC குடும்பங்களை சேர்ந்த பெண்கள் பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
** விண்ணப்பதாரர் கட்டாயம் பெண்ணாக இருக்க வேண்டும்
** விண்ணப்பிக்கும் பெண்ணிற்கு 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்
** விண்ணப்பிக்கும் பெண்ணின் குடும்பம் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும்
** வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளதற்கான ஆவணம் கட்டாயம் தேவை
** விண்ணப்பதாரரின் எந்த குடும்ப உறுப்பினரின் பெயரிலும் எல்பிஜி இணைப்பு இருக்கக் கூடாது.