கேரளாவில் எலி காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்
கொசுக்கள் மூலம் பரவும் வெஸ்ட் நைல் காய்ச்சலால் கேரள மாநிலம் அண்மையில் பாதிக்கப்பட்டது. அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்தது. இந்த நிலையில், கேரளாவில் எலி காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இங்கு லெப்டோஸ்பைரோசிஸ் பாதிப்பு உள்ளது. ஆனால் தற்போது லெப்டோஸ்பைரோசிஸ் பாதிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். அதை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம் நடத்தி வருகிறோம். ரூ.4687 கோடியை இலவச சிகிச்சைக்காக செலவிட்டுள்ளோம். நிதி ஆயோக் தரவுகளின்படி, மருத்துவர்-நோயாளி இடையேயான சிறந்த விகிதம் எங்கள் மாநிலத்தில் உள்ளது.” என்றார்.
லெப்டோஸ்பைரோசிஸ் என்றால் என்ன? எப்படி பரவுகிறது?
எலி காய்ச்சல் தான் லெப்டோஸ்பைரோசிஸ் (Leptospirosis) எனப்படுகிறது. எலிகள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அங்கெல்லாம் எலிக்காய்ச்சல் வர வாய்ப்புண்டு. அசுத்தமான தண்ணீரில் 'லெப்டோஸ்பைரா' (Leptospira) என்ற நுண்ணுயிர் இருக்கும். அந்தத் தண்ணீரை குடிக்கும்போதோ, அந்த தண்ணீர் உடலில் படும்போதோ எலியின் உடலை அந்த நுண்ணுயிர் தாக்கும். அப்படித் தாக்கப்பட்ட எலிகளின் எச்சில், சிறுநீர், கழிவுகள் மூலமாக `லெப்டோஸ்பைரோசிஸ்' (Leptospirosis) எனப்படும் எலிக்காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுகிறது.
எலி காய்ச்சலில் இரண்டு வகைகள் உள்ளன. லெப்டோஸ்பைரா இன்டெரோகன்ஸ்' (Leptospira interrogans) மற்றும் `லெப்டோஸ்பைரா பைஃபிளக்சா' (Leptospira biflexa). இதில் முதல் வகை மிகவும் ஆபத்தானது.
உத்தரகாண்ட் சார்தாம் புனித யாத்திரை: பக்தர்கள் 50 பேர் பலி!
மழைக்காலத்தில், வீட்டில் பயன்படுத்தும் நீரிலும், வீதியில் தேங்கியிருக்கும் நீரிலும் எலியின் கழிவுகள் கலக்கும். அந்த நீரில் வெறுங்காலுடன் நடந்தால் எலிக்காய்ச்சல் வர வாய்ப்புள்ளது. பாதத்தில் காயங்கள் அல்லது சிராய்ப்புகள் இருந்தால் 'லெப்டோஸ்பைரா' நுண்ணுயிர் எளிதாக உடலுக்குள் ஊடுருவிவிடும். இந்த நுண்ணுயிர் உடலுக்குள் சென்றவுடன், காய்ச்சல் வரும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பவர்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பாதிப்பு அதிகமாகும். எலிக் காய்ச்சலுக்கு தடுப்பூசி எதுவும் கிடையாது. ஆனால், ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உண்டு. உடல் உறுப்பில் ரத்த கசிவு ஏற்படும். சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்படும், மஞ்சல் காமாலை ஏற்படும்.
எலி காய்ச்சல் அறிகுறிகள்
கடுமையான தலைவலி, குளிர்க்காய்ச்சல், சாதாரண காய்ச்சல், உடல்வலி, வயிற்றுவலி, வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, கண்கள் சிவப்பது, தோலில் அரிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மூன்று நாள்களுக்குமேல் காய்ச்சல் தொடர்ந்தாலே எலிக்காய்ச்சலைக் கண்டறியும் பரிசோதனை அவசியம் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
எலிக்காய்ச்சல் வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். வெளியில் செல்லும் போது கண்டிப்பாக செருப்பு அணிய வேண்டும். தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். எலித் தொல்லை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் தண்ணீர் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.