உத்தரகாண்ட் மாநிலம் சார்தாம் புனித யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி உள்ளிட்ட வழிபாட்டுத் தளங்களுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த சார்தாம் புனித யாத்திரையானது யமுனோத்ரியிலிருந்து தொடங்கி, கங்கோத்ரி, கேதார்நாத் வழியாகச் சென்று இறுதியாக பத்ரிநாத்தில் முடிவடைகிறது.
அந்தவகையில், நடப்பாண்டுக்கான சார்தாம் புனித யாத்திரை கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், சார்தாம் புனித யாத்திரை தொடங்கிய 15 நாட்களில் யாத்திரை சென்ற பக்தர்கள் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கர்வால் ஆணையர் சங்கர் பாண்டே, “சார்தாம் புனித யாத்திரை சென்ற பக்தர்கள் 52 பேர் இதுவரை மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.” என்றார்.
ஜெயலலிதாவுக்கு ஹிந்துத்துவா சாயல் பூசுவதா? அண்ணாமலைக்கு கே.சி.பழனிசாமி கண்டனம்!
கங்கோத்ரியில் 3 பக்தர்களும், யமுனோத்ரியில் 12 பேரும், பத்ரிநாத்தில் 14 பேரும், கேதார்நாத்தில் 23 பக்தர்களும் உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார். “சார்தாம் யாத்திரை செல்லும் 50 வயதுக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கோயில்களுக்கு செல்லும் வழியில் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. யாத்ரீகர்களின் உடல்நிலை மருத்துவ ரீதியாக போதுமானதாக இல்லை என்றால் பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.” எனவும் கர்வால் ஆணையர் சங்கர் பாண்டே தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அவர்கள் யாத்திரையைத் தொடர வேண்டும் என்று வற்புறுத்தினால், ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்து அளித்தால் அவர்கள் யாத்திரை செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். சார்தாம் யாத்திரை ஏற்பாடுகளை மேலும் மேம்படுத்த தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை ஒன்பது லட்சத்து 67 ஆயிரத்து 302 பக்தர்கள் சார்தாம் தரிசனம் செய்துள்ளனர் என அவர் கூறினார். சார்தாம் யாத்திரை சுமூகமாக நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.