பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மன் செல்ல உபயோகப்படுத்தியதாக கூறப்படும் டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்
முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சித் தலைவருமான தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோக்கள் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யாக இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா, 2024 மக்களவைத் தொகுதியில் மீண்டும் ஹாசன் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி வேட்பாளராக போட்டியிடும் நிலையில், அவரது பாலியல் லீலைகள் அடங்கிய 2976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து அம்மாநில காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர் தொடர்பான பாலியல் வீடியோ பரவத் தொடங்கிய நிலையில், கர்நாடக மாநில மக்களவைத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவின் போது, வாக்களித்து விட்டு உடனடியாக அவர் ஜெர்மன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவரை நாடு கடத்தி உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஏராளமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பிரஜ்வல் ரேவண்ணாவிடம் விசாரணை மேற்கொள்வதற்காக, அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வழக்கமாக பயன்படுத்தும் சாதரண பாஸ்போர்ட்டை பயன்படுத்தாமல், இந்த டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட்டை பயன்படுத்தித்தான் பிரஜ்வல் ரேவண்ணா உடனடியாக ஜெர்மன் சென்றதாக கூறப்படுகிறது. தூதரக பாஸ்போர்ட் எனும் டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் வைத்திருந்தால் சில நாடுகள் உடனடியாக விசா வழங்கும், சில நாடுகளுக்கு விசா எடுக்காமலே இந்த பாஸ்போர்ட் மூலம் செல்லும் வசதி உள்ளது.
இந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தித்தான் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு சென்றதாகவும், இந்த பாஸ்போர்ட் மூலம் நவம்பர் மாதம் வரை அவர் வெளிநாடு செல்ல அனுமதி உள்ளதாக தெரிகிறது.
டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் என்றால் என்ன?
தூதரக பாஸ்போர்ட், டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட், இராஜதந்திர பாஸ்போர்ட், ‘டைப் டி’ பாஸ்போர்ட் என அழைக்கப்படும் இந்த போஸ்போர்ட்டானது, இந்திய தூதர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் சார்பாக அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படுகிறது.
அதன்படி, ஹாசன் தொகுதி எம்.பி.யாக உள்ளதால் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாதாரண பாஸ்போர்ட்டை தவிர டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவர் உண்மையிலேயே டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வெளிநாடு சென்றிருந்தால், விதிகளின்படி, தனிப்பட்ட முறையில் செல்வதானால் கூட, முன்னரே அவர் அரசியல் ரீதியாக அனுமதி பெற விண்ணப்பித்திருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட், மெரூன் நிறத்தில் இருக்கும். 28 பக்கங்கள் கொண்ட இத்தகைய பாஸ்போர்ட்கள்ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான காலத்திற்கு செல்லுபடியாகும் வகையில் வழங்கப்படுகின்றன. நீல நிறத்தில் இருக்கும் சாதாரண பாஸ்போர்ட் பெரியவர்களுக்கு 10 ஆண்டுகள் மற்றும் சிறார்களுக்கு ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் காலத்திற்கு வழங்கப்படுகின்றன.
துபாய்க்கு மீண்டும் சோதனை காலம்... அடித்து வீசும் காற்று... மிரட்டும் வானிலை: விமானங்கள் ரத்து!
டெல்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் பாஸ்போர்ட் சேவா திட்டத்துக்கான பிரிவில் டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இருப்பினும், ஒருவர் தற்போதைய முகவரியுடன் இணைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம்.
யாரெல்லாம் பெறலாம்?
இராஜதந்திர அந்தஸ்துள்ள நபர்கள், அதிகாரப்பூர்வ அலுவல்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வதற்காக இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நபர்கள், IFS (இந்திய வெளிநாட்டு சேவைகள்) கிளை A மற்றும் B கிளையின் கீழ் பணிபுரியும் அதிகாரிகள், வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் பணிபுரியும் நபர்கள், இந்திய வெளியுறவுச் சேவை மற்றும் வெளியுறவு அமைச்சகத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் உறவினர்கள், அவர்களின் நேரடி குடும்ப உறுப்பினர்கள், கல்வி, ஓய்வு அல்லது வணிகம் போன்ற நோக்கங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லத் திட்டமிட்டால் டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட்டைப் பெறலாம்.
நன்மைகள் என்ன?
தூதரக பணிகளில் இந்திய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தனிநபர்களுக்கான அதிகாரப்பூர்வ அடையாள ஆவணமாக இது செயல்படுகிறது. டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் வைத்திருக்கும் நபர்களுக்கு சர்வதேச சட்டத்தின்படி, சில சலுகைகள் மற்றும் விலக்குகள் வழங்கப்படுகின்றன. இந்த பாஸ்போர்ட்டை பயன்படுத்தி செல்லும் நாடுகளில் கைது, தடுப்புக்காவல், சில சட்ட நடவடிக்கைகளில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். டிப்ளமெட்டிக் பாஸ்போர்ட் வைத்திருந்தால் சில நாடுகள் உடனடியாக விசா வழங்கும், சில நாடுகளுக்கு விசா எடுக்காமலே இந்த பாஸ்போர்ட் மூலம் செல்லும் வசதி உள்ளது. விமான நிலையங்களிலும் மற்றும் குடியேற்ற நடைமுறைகளின் போதும் முன்னுரிமை கிடைக்கும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விதி என்ன சொல்கிறது?
ராஜ்யசபா செயலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தூதரக பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தும் போது, www.epolclearance.gov.in என்ற இணைப்பைப் பயன்படுத்தி, வெளியுறவு அமைச்சகத்திற்கு நேரடியாக அரசியல் அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாடு செல்வதற்கு முன், உறுப்பினர்கள் தேவையான அரசியல் அனுமதியை பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம். தனிப்பட்ட பயணத்தின்போதும் இந்த விதி பொருந்தும்.