கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் மோடி ஃபோட்டோ நீக்கம் ஏன்?

By Manikanda PrabuFirst Published May 2, 2024, 3:38 PM IST
Highlights

கொரோனா தடுப்பூசி சான்றுதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் பேசுபொருளாகி உள்ளது

உலக நாடுகள் பலவற்றிலும் தனது தடத்தை பதித்து அந்த நாடுகளை அலற விட்ட கொரோனா, தன்னுடைய சிறகை விரித்து இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு இறுதியில் நுழைந்தது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் அனைவரது வாழ்க்கையையும் புரட்டி போட்ட சூழலில், உலக நாடுகள் அதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளில் இறங்கின. இந்தியாவும் தன்னுடைய பங்குக்கு ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.

கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படு உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு பெரும்பாலானோருக்கு போடப்பட்டது.

இந்தியாவை பொறுத்தவரை, கோவிஷீல்டு, கோவாக்சின், மாடர்னா, ஸ்புட்னிக் V, ஜான்சன் அண்டு ஜான்சன், ஊசியில்லா தடுப்பூசியான சைகோவ்-டி உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியது.

ஆபாச வீடியோ சர்ச்சை: முதல் முறையாக மவுனம் கலைத்த பிரஜ்வல் ரேவண்ணா!

இருப்பினும், ஹைதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து விநியோகிக்கும் கோவாக்சின், புனே சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளே இந்தியாவில் பெரும்பாலானோருக்கு போடப்பட்டன. இந்த இரண்டு தடுப்பூசிகளும் தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்டு, பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டன. தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கியது.

இதில், கோவாக்சின் தடுப்பூசியை ஐசிஎம்ஆர், தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து தேசிய வைராலஜி நிறுவனம் தயாரித்து வருகிறது. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. அதேசமயம், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, COVID-19 தடுப்பூசியான “கோவிஷீல்ட்” (Covishield) மருந்தை,  இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பன்னாட்டு மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் (AstraZeneca) இணைந்து தயாரித்தது.

இந்தியாவில் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டது. கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அந்த சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அது அப்போதே சர்ச்சையானது. நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் ஒரு திட்டத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவதா என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், கொரோனாவை இந்தியாவில் பெருமளவு பரவவிடாமல் ஒழித்துக் கட்டியதாக ஆளும் மத்திய பாஜக அரசு பெருமிதம் தெரிவித்ததுடன், பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது தவறில்லை என பாஜகவினர் ஆதரவு குரல் எழுப்பினர்.

இருப்பினும், மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது அவரை முன்னிலைப்படுத்தும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால், ஆளும் பாஜக அரசு அசைந்து கொடுக்கவில்லை. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி சான்றுதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கிய கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

“ஒன்றாக இணைந்து, இந்தியா கோவிட்-19-ஐ தோற்கடிக்கும்.” என்ற வாசகத்துடன் பிரதமர் மோடியின் புகைப்படமும், அதற்கு கீழே நரேந்திர மோடி என்ற பெயரும் தடுப்பூசி போட்டதற்கு வழங்கப்பட்ட CoWIN சான்றிதழ்களில் இடம்பெற்றிருந்தன. தற்போது அந்த வாசகமும், பிரதமர் என்று மட்டும் இடம்பெற்றுள்ளது. பிரதமர் மோடியின் புகைப்படம் மற்றும் அவரது பெயர் ஆகியவை  நீக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி சான்றுதழ்களில் பிரதமர் மோடியின் புகைப்படமும், பெயரும் நீக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் பேசுபொருளாகி உள்ளது. பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டதற்கு தேர்தல் நடைமுறைகளை காரணம் காட்டியிருக்கிறது மத்திய அரசு. ஆனால், தேர்தல் நடைமுறைகள் தொடங்கி ஒரு மாதத்திற்கு பின்னர் நீக்கியது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள், நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்ற தகவல்கள் வெளியாகியிருப்பதே பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டிருப்பதற்கு காரணம் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

 

Modi ji no more visible on Covid Vaccine certificates

Just downloaded to check - yes, his pic is gone 😂 pic.twitter.com/nvvnI9ZqvC

— Sandeep Manudhane (@sandeep_PT)

 

முன்னதாக, கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல், ரத்தத் திட்டுகள் குறைவு போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம் என அந்த தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்க விளவுகளும் ஏற்படுவதாக சுமார் 51 பேர் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்த நிலையில், பிரிட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில் 'COVISHIELD' தடுப்பூசி, மிக அரிதாக TTS என்ற ரத்த உறைதல் பக்க விளைவை ஏற்படுத்தும் என்று AstraZeneca கூறியுள்ளது.

 

PM Modi's photo removed from Covid vaccine certificates.😭😭 pic.twitter.com/zW4AsMnHPt

— Mahua Moitra Fans (@MahuaMoitraFans)

 

இந்தியாவில் சுமார் 174.94 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என அந்த தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ராஜெனெகா இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் ஏற்பட்ட பாதிப்புகளை மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!