உலக நாடுகள் பலவும் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாம் அனைவரும் கொரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக் கிழமையில் வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் 2022ம் ஆண்டின் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், பொதுமக்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட வெளியில் செல்லக்கூடும். அவ்வாறு செல்லும் போது கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். விடுமுறைக் கொண்டாட்டம் கொரோனா பரவலால் பாதிக்காமல் இருப்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு நாடுகளிலும் கொரோனா உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக நமது அண்டை நாடான சீனாவில் ஜீரோ கொரோனா என்ற திட்டத்தை கைவிட்ட பின்னர் கொரோனா வேகமாக பரவியுள்ளது.
2022ம் ஆண்டு இந்தியாவுக்கு பல வகையில் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. இந்தியா உலக அரங்கில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் 220 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. உலகில் 5வது பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. ஏற்றுமதியில் இந்தியா 400 பில்லியன் டாலர்களைத் தொட்டுள்ளது. விண்வெளித்துறை, பாதுகாப்புத் துறை, டிரோன்கள் மற்றும் விளையாட்டுத் துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது என்றார்.