
பிரதமர் மோடி அழைப்பு
மகோபா, அக். 25-
உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மகோபா பகுதியில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, “ உத்தரப்பிரதேசத்தை உத்தமப் பிரதேசமாக மாற்றுவோம், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சியின் வலையில் சிக்கியிருக்கும் தொண்டர்கள் வெளியே வாருங்கள்'' என அழைப்பு விடுத்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் பாரதிய ஜனதா கட்சி பல வியூகங்களை வகுத்து செயல்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி தனது பிரசாரத்தை நேற்று பந்தல் காண்ட் மண்டலத்தில் தொடங்கினார்.
அங்குள்ள மஹோபா பகுதியில் பிரதமர்மோடி பேசுகையில், “ உத்தரப் பிரதேசம் ஏராளமான அரசியலைப் பார்த்துவிட்டது. அனைத்து விதமான அரசியல் விளையாட்டுக்களும் விளையாடப்பட்டு விட்டன.
விளையாட விரும்பியவர்கள் விளையாடிவிட்டனர், எதையாவது பெற வேண்டும் என நினைத்தவர்கள் பெற்றுவிட்டனர். சிலநேரங்களில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகளின் உலகம் கூட நகர்ந்துவிட்டது. ஆனால், உங்களின் உலகம் மாறவில்லை.
அடுத்த 10 ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்தை உத்தமபிரதேசமாக மாற்ற மக்களாகிய நீங்கள் விரும்பினால், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் பொறியில் இருந்து வெளியே வாருங்கள்.
மாநிலத்தை பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ் வாதி கட்சியும் கடந்த 15 ஆண்டுகளாக மாறிமாறி ஆட்சி செய்தன. தேர்தல் வரும்போதெல்லாம் இரு கட்சிகளும் ஊழல்பிரச்சினையை எழுப்பினாலும், ஆட்சிக்கு வந்தபின் அதற்கு எதிராக நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை.
பகுஜன் சமாஜ் கட்சி, தனது ஆட்சிக்காலத்தில் சமாஜ் வாதி கட்சியினர் யாரையாவது சிறைக்கு அனுப்பியிருக்கிறதா?. அதைப் போலவே, இப்போது சமாஜ் வாதி கட்சியும் செய்கிறது. இரு கட்சிகளும் சேர்ந்து மக்களைக் குழப்பி, மாநிலத்தில் அவர்களின் விளையாட்டு தொடர்கிறது. மாநிலத்தை சீரழித்து வருகிறார்கள்.
எங்களது பாரதிய ஜனதா ஆட்சியில் கடந்த 2½ ஆண்டுகளில் ஏதேனும் ஒரு ஊழல் வழக்கு வெளிப்பட்டதுண்டா? ஊழல் பற்றி யாரேனும் பேசுவதைக் கேட்டதுண்டா?. இந்த நாட்டில் நேர்மையான அதிகாரிகள், ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்படுவது அவசியம். உத்தரப்பிரேத மாநிலத்திலும் ஊழல் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
கடந்த மக்களவைத் தேர்தலிலும், வருகின்ற சட்டசபைத் தேர்தலிலும் ஒரு விஷயம் எனக்கு தெளிவாகப் புரிகிறது. ஒரு புறம் ஒரு கட்சி தனது ‘குடும்பத்தை’ நினைத்து கவலைப்படுகிறது. மற்றொரு புறம் ஒரு கட்சி ‘நாற்காலி’யை நினைத்து ஏங்குகிறது.
பாரதிய ஜனதா கட்சி மட்டுமே உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பற்றி கவலைப்படுகிறது. மாநிலத்தின் மக்களை குறிப்பாக இளைஞர்களின் எதிர்காலத்தை நினைத்து வேதனைப்படுகிறது.
உங்களுடைய முன்னோர்கள் சமாஜ் வாதி அல்லது பகுஜன் சமாஜ் கட்சிக்கு விசுவாசமாக இருந்திருக்கலாம். ஆனால், நீங்கள் உங்கள் எதிர்காலத்தையும், மாநிலத்தின் எதிர்காலத்தையும் நினைத்துப்பார்க்க வேண்டும். அதற்கு அனைவரும் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.