
டிவிட்டர் சமூக வலைத்தளம் இப்போதெல்லாம் பிரபலங்கள் பலரிடம் பிரபலமாக உள்ளது. தாங்கள் சொல்ல வரும் கருத்தை டிவிட்டரிலேயே ட்வீட் செய்து அரசியல்வாதிகளே சமூகக் கடமை ஆற்றும் போது, மற்றவர்கள் சும்மா இருப்பார்களா என்ன?
டிவிட்டரில் பிரபலங்கள் மட்டுமல்லாது அவர்களின் பிள்ளைகளும் இப்போது பிரபலங்களாக முயற்சி செய்கின்றனர். அவர்களைச் சுற்றி வரும் செய்திகள், பொதுமக்கள் பலரால் விரும்பிப் படிக்கப் படுவதுடன், சர்ச்சைகளையும் அவ்வப்போது ஏற்படுத்தி விடுவதுண்டு. அப்படி ஒரு சர்ச்சைக்காகவே, சச்சின் டெண்டுல்கர் தன் பிள்ளைகள் குறித்து எந்த டிவிட்டரும் இல்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார். இது குறித்து அவர் இன்று இரண்டு டிவிட்டர் பதிவுகளை இட்டிருந்தார்.
என் குழந்தைகள் அர்ஜுன் மற்றும் சாரா பெயரில் செயல்படும் போலி டிவிட்டர் கணக்குகளை உடனடியாக நீக்குங்கள் என்று டிவிட்டருக்கு சச்சின் டெண்டுல்கர் மீண்டும் ஒரு வேண்டுகோளை டிவிட்டர் மூலம் முன் வைத்துள்ளார்.
இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மெனாகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் டிவிட்டரில் பலமாக இயங்கி வருபவர். இவரது மகன் அர்ஜுன் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். ஒரு வேகப்பந்து வீச்சாளராக உருவெடுப்பதே லட்சியம் எனக் கூறி வருகிறார். சச்சினின் மகள் சாரா நடிப்பில் ஆர்வம் காட்டி பயிற்சி பெற்று வருகிறாராம்.
கடந்த 2014லேயே அர்ஜுன், சாரா இருவரின் பெயரிலும் டிவிட்டரில் கணக்குகள் துவங்கப்பட்டு, ட்விட்கள் வெளியாகின. ஆனால் சச்சின் அவற்றை மறுத்ததோடு, அவை போலி கணக்குகள் என்றும், தன் மகனோ மகளோ டிவிட்டர் கணக்குகளில் இல்லை என்றும், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் டிவிட்டருக்கு வேண்டுகோள் வைத்தார். ஆனால் அவை நீக்கப்படவில்லை.
இந்நிலையில் சச்சின் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதில் அவர், 'அர்ஜுன், சாரா டிவிட்டரில் இல்லை என்பதனை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். அவற்றை உடனடியாக நீக்க வேண்டும் என்று டிவிட்டருக்கு மீண்டும் வேண்டுகோளை முன்வைக்கிறோம்
'இப்படிப்பட்ட போலி கணக்குகளால் பாதிப்பு ஏற்படுகிறது. தவறாகப் புரிந்து கொள்ளப் படுகிறது. இதன் விளைவுகள் எங்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது' என்று டிவிட் செய்து, தன் வேதனையைப் பகிர்ந்துள்ளார்.