குழந்தையை கொல்ல முடியாது என 26 வார கருவை கலைக்கும் வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான திருமணமான பெண் ஒருவர் தனது 26 வார கர்ப்பத்தைக் கலைக்க அனுமதித்த மத்திய அரசின் உத்தரவை திரும்பப் பெறக் கோரிய மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “ஒரு குழந்தையை எங்களால் கொல்ல முடியாது” என்று தெரிவித்துள்ளது.
தாயின் சுயமாக முடிவெடுக்கும் உரிமையுடன், கருவில் வாழும் பிறக்காத குழந்தையின் உரிமைகளும் சமநிலைப்படுத்த வேண்டும் என்று தெளிவுபடுத்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய், சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஜே பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்னும் சில வாரங்களுக்கு கர்ப்பத்தை தக்கவைத்துக் கொள்ளும் சாத்தியம் பற்றி அப்பெண்ணிடம் மத்திய அரசு, அதன் வழக்கறிஞர்களும் பேசுமாறு கேட்டுக் கொண்டது.
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு!
மேலும், எய்ம்ஸ் மருத்துவர்களிடம் கருவின் இதயத்தை நிறுத்தச் சொல்ல வேண்டுமா? என 27 வயதான அப்பெண்ணின் சார்பாக ஆஜரான வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியது. அதற்கு இல்லை என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, 24 வாரங்களுக்கு மேல் காத்திருந்த அப்பெண் இன்னும் சில வாரங்கள் கருவை தக்க வைத்துக் கொண்டால், ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்த வழக்கின் விசாரணையை நாளை காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்தது. முன்னதாக, 26 வார கர்ப்பத்தை கலைக்க அப்பெண்ணுக்கு அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்ற உத்தரவை திரும்பப் பெறுவதற்கான மத்திய அரசின் மனு மீது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பெண், உணர்ச்சி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் மூன்றாவது குழந்தையை வளர்க்கும் நிலையில் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு கருவை கலைக்க அவருக்கு கடந்த 9ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.