பாரத குடியரசுக்கு பின்னால் இருக்கும் அரசியலை ஆராயக்கூடிய கட்டத்தில் நாம் இருக்கிறோம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்
சென்னை எழும்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக எம்.பி., கனிமொழி கலந்து கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றும் தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த திமுக எம்.பி. கனிமொழி, “அரசியலமைப்புச் சட்டத்தில் அவ்வாறு இருப்பதாகக் கூறுவார்கள். இந்த இரண்டு வார்த்தைகளுமே அதில் உள்ளன. பாரத், இந்தியா என இரண்டு பெயர்களையும் மேடையில் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். இன்றைக்கு புதுமையாக தேவையில்லாத சர்ச்சையை கிளப்பக்கூடிய வகையில், பாரத குடியரசு தலைவர் என்றும் இந்தியாவின் பெயரை மாற்ற போகிறோம் என்றும் கூறுகிறார்கள். இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய அரசியலை ஆராயக்கூடிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். அதை நாம் எதிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகிறோம். எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணி, அவர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், சரித்திரத்தையே மாற்றம் செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “வரலாற்றை மாற்றுவது, பெயர்களை மாற்றுவது எனத்தொடங்கி, சட்டங்களுக்குக்கூட இந்தியில் பெயர் வைக்க ஆரம்பித்துவிட்டனர். எல்லா திட்டங்களுக்கும் புரியாத பெயர்களை வைக்கும் அவர்களுக்கு இதுபோல மாற்றுவது சாதாரண ஒன்றாக தோன்றலாம். எத்தனையோ விசயங்களில் மனதை புண்படுத்திவிட்டதாக கூறும் அவர்கள், இப்படி பெயர் மாற்றுவதன் மூலம் இந்தியர்களின் மனதை புண்படுத்தக்கூடாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.” என்றார்.
ஜி20 பாரத மண்டபத்தில் நடராஜர் சிலை: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
ஜி20 உச்சிமாநாட்டின் முதன்மை அமர்வு கூட்டம் வருகிற செப்டம்பர் 9,10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது. ஜி20 மாநாட்டையொட்டி, செப்டம்பர் 9ஆம் தேதி இரவு 8 மணியளவில் இரவு விருந்து நடைபெறவுள்ளது. இந்த விருந்தில் கலந்து கொள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில், பாரத ஜனாதிபதி என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக, இதுபோன்ற அழைப்பிதழ்களில் ராஷ்டிரபதி பவன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், இப்போது பாரத ஜனாதிபதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றன. இதனிடையே, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் இந்தியாவின் பெயரை பாரத குடியரசு என மாற்றும் சட்டமசோதாவை ஆளும் பாஜக அரசு தாக்கல் செய்யப்போவதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.