வயநாட்டுக்கு முன் இந்தியாவை புரட்டிப் போட்ட மிக மோசமான நிலச்சரிவு துயரங்கள்!

By SG Balan  |  First Published Jul 30, 2024, 6:24 PM IST

வயநாடு நிலச்சரிவில் குறைந்தது 93 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தியாவைத் தாக்கிய மோசமான நிலச்சரிவுகளைப் பற்றிப் பார்ப்போம்.


செவ்வாய்கிழமை அதிகாலை கேரளாவின் வயநாட்டில் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலச்சரிவுகள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. வயநாட்டின் கல்பெட்டா நகரத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முண்டகை மற்றும் சூரல்மாலா பகுதிகளில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் குறைந்தது 93 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. மழை வெள்ளம் காரணமாக மீட்புப் பணிகள் மந்ததமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

Latest Videos

undefined

NDRF, ராணுவம் மற்றும் விமானப்படை குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள நிலையில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்தியாவைத் தாக்கிய மிக மோசமான நிலச்சரிவுகளைப் பற்றிப் பார்ப்போம்.

கேதார்நாத், உத்தரகாண்ட் (2013)

ஜூன் 2013 இல் ஏற்பட்ட மேக வெடிப்புகளின் விளைவாக பெய்த மழை மற்றும் கடுமையான வெள்ளத்தின் விளைவாக ஏற்பட்ட கேதார்நாத் நிலச்சரிவு, இந்திய வரலாற்றில் மிக மோசமான நிலச்சரிவாக இருக்கக்கூடும். 5,000 க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள்.

மாலின், மகாராஷ்டிரா (2014)

2014ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் மாலின் கிராமத்தில் இடைவிடாத மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் 151 பேர் இறந்தனர். 40 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.

ஷில்லாங், மேகாலயா (2011)

பலத்த மழைக்குப் பிறகு, மேகாலயாவின் ஷில்லாங்கில் 2011 இல் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர்.

கோட்டயம், கேரளா (2019)

கேரளாவுக்கு நிலச்சரிவு புதிதல்ல. 2019ஆம் ஆண்டில், கோட்டயம் மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவு மற்றும் மண் அரிப்பு காரணமாக நிலச்சரிவு ஏற்ப்பட்டது. குறைந்தது 15 பேர் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர்.

மணிப்பூர் (2022)

மணிப்பூர் 2022இல் பேரழிவு தரும் நிலச்சரிவை சந்தித்தது. தலைநகர் இம்பால் உட்பட மாநிலம் முழுவதும் பெய்த கனமழையின் விளைவாக ஏற்பட்ட நிலச்சரிவில் 40 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

click me!