கனமழை காரணமாக தண்டவாளங்களில் தேங்கியுள்ள நீர் காரணமாக 406 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அணைகளில், ஆறுகளில் தண்ணீர் அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில், கனமழை காரணமாக தண்டவாளங்களில் தேங்கியுள்ள மழை நீர் காரணமாக ஜூலை 7 முதல் ஜூலை 15 வரை 300க்கும் மேற்பட்ட மெயில் மற்றும் விரைவு ரயில்கள் மற்றும் 406 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக, சுமார் 600 மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் 500 க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வடமேற்கு இந்தியாவில் கடந்த சனிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு இடைவிடாத மழை பெய்தது. அதேபோல், ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் மிகக் கனமழை பதிவாகியுள்ளது.
மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
இதன் காரணமாக, ஆறுகள், அணைகள், வடிகால்கள் நிரம்பி வழிகின்றன. கனமழையால் உட்கட்டமைப்பும் பெருமளவில் சேதமடைந்துள்ளன. ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அத்தியாவசிய சேவைகளும் பாதிக்கப்பட்டன.
கனமழை காரணமாக இந்த பிராந்தியத்திற்கான வடக்கு இரயில்வே சுமார் 300 மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்களை ரத்து செய்துள்ளது. 100 ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. 191 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 67 அதன் செல்லும் இடங்களுக்கு முன்னர் வேறு ஒரு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதாகவும் வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தண்டவாளங்களில் தேங்கியுள்ள மழை நீர் காரணமாக வடக்கு ரயில்வே 406 பயணிகள் ரயில்களை ரத்து செய்துள்ளது. 28 ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. 54 பாதியிலேயே நிறுத்தப்பட்டன. 56 ரயில்கள் வேறு ஒரு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டதாகவும் அதிகாரிகல் தெரிவித்துள்ளனர்.