இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்: அச்சத்தில் மலையாளிகள்!

By Manikanda Prabu  |  First Published Oct 10, 2023, 1:18 PM IST

இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் காரணமாக அப்பகுதியில் உள்ள கேரள மாநிலத்தவர்கள் அச்சத்தில் உள்ளனர்


இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் தீவிரமடைந்து வருவதால், மேற்கு ஆசியாவின் இப்பகுதியில் வாழும் 7,000-க்கும் மேற்பட்ட மலையாள புலம்பெயர்ந்தோர் அச்சத்தில் வாழ்கின்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தாலும், கடுமையான தாக்குதல்கள், குறிப்பாக போர் நிறுத்த உடன்படிக்கை எல்லைக்குட்பட்ட நகரங்களில் வசிக்கும் மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

கேரளாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர், பராமரிப்பாளராக அவர் வசிக்கும் வீட்டின் அருகே வெடிகுண்டு தாக்குதல் நடந்தததால் காயம் அடைந்ததாக இஸ்ரேலிய மலையாளி சங்கத்தின் உறுப்பினர் சாலமன் கூறியுள்ளார். கடந்த காலங்களைப் போல் அல்லாமல், தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Latest Videos

undefined

பராமரிப்பாளர்களாக புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு போர் போன்ற சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவது கடினமாக உள்ளதாக தெரிவிக்கும் சாலமன், அஷ்கெலோன் மற்றும் பீர்ஷெபா போன்ற எல்லையோர நகரங்களில் நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எல்லைப் பகுதியில் இரு தரப்பிலும் தாக்குதல் கடுமையாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். “பிரச்சினை என்னவென்றால், காசாவில் இருந்து வீசப்படும் குண்டுகளால் மட்டுமல்ல, இஸ்ரேலிய தரப்பிலிருந்து வீசப்படும் குண்டுகளும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. ஹமாஸ் 40 குண்டுகளை வீசினால், இஸ்ரேல் அதற்கு இரட்டிப்பாக பதிலடி கொடுக்கிறது.” என அவர் கூறியுள்ளார்.

இந்த மோதல் நீண்டு கொண்டே போகும். மேலும் தீவிரமடையலாம் என கடந்த ஐந்து ஆண்டுகளாக இஸ்ரேலில் பராமரிப்பாளராகப் பணிபுரியும் பெட்டி ஜோசப் கூறுகிறார். “கடந்த காலங்களில், ஷெல் தாக்குதல்கள் எல்லையில் கட்டுப்படுத்தப்பட்டன. ஆனால், இம்முறை ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலிய நிலத்துக்குள் ஊடுருவியுள்ளனர். இஸ்ரேலிய இராணுவம் பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் கொண்டு வந்தாலும், அஷ்கெலோன் போன்ற சில பகுதிகளில் போராளிகள் பதுங்கியிருக்கிறார்கள். தீவிரவாதிகள் நாடு வேறுபாடின்றி வீடுகளுக்குள் புகுந்து மக்களை கொன்று வருகின்றனர்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“இஸ்ரேலிய அரசாங்கம் அனைவரையும் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. அதற்குக் காரணம் ஹமாஸின் இருப்புதான். கண்டவுடன் சுடும் உத்தரவு அமலில் உள்ளது.” என ஒன்பது மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல் வந்தடைந்த சோனியா பென்னி கூறுகிறார்.

டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்ட 67 வயது பெண் ஒருவரின் பராமரிப்பாளராக அஷ்கெலோனில் சோனியா வசித்து வருகிறார். நிலைமை மோசமாக இருந்தாலும், நாங்கள் இஸ்ரேலியர்களால் கவனித்துக் கொள்ளப்படுகிறோம் என்று அவர் கூறுகிறார்.

Israel Palestine conflict: இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் காசா? நாட்டு மக்களுக்கு பெஞ்சமின் நெதன்யாகு உரை!!

“எங்களது பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் இங்கு வேலை செய்ய வருவதற்குக் காரணம், இந்த நாடு வழங்கும் நல்ல ஊதியமும் பாதுகாப்பான வேலைச் சூழலும்தான். மற்ற இடங்களைப் போல ஒருபோதும் பாகுபாடு காட்டப்படுவதில்லை.” என்றும் சோனியா கூறினார்.

மீண்டும் இந்தியாவுக்கு வர விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சாலமன், “தற்போதைக்கு, அனைத்து விமான சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. விமான நிலையம் மீண்டும் திறக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போதைக்கு இல்லை.” என்று தெரிவித்தார்.

கேரளாவில் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் நலத்துறை கூறுகையில், இஸ்ரேலில் உள்ள மலையாளி புலம்பெயர்ந்தோருடன் தொடர்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது. “நாங்கள் தூதரகம் மற்றும் சமூக சங்கங்களுடன் தொடர்பில் இருக்கிறோம். புலம்பெயர்ந்தோர் தற்போது பாதுகாப்பாக உள்ளனர்.” என கேரளாவில் புலம்பெயர்ந்தவர்கள் நலத்துறையான நோர்கா தெரிவித்துள்ளது.

“மலையாளி சமூகத்தைச் சேர்ந்த 500 பேர் மட்டுமே நோர்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளனர், மேலும் 500 பேர் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். மற்றவர்கள் ஏஜென்சிகள் மூலம் பணிக்கு சேர்ந்தவர்கள் அல்லது வலைகுடா நாடுகளில் பணிபுரியும் போது அங்கிருந்து அப்படியே பணிக்கு சேர்ந்தவர்கள்.” என நோர்கா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

click me!